சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுச்சேரியில் கடலோரப் பகுதிகளைத் தூய்மைப்படுத்தும் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் திரு பூபேந்திர யாதவ்

प्रविष्टि तिथि: 27 AUG 2022 10:04AM by PIB Chennai

மத்திய சுற்றுச்சூழல், வனம் & பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் மற்றும் புதுச்சேரி அறிவியல், தொழில்நுட்பம் & சுற்றுச்சூழல் துறை ஆகியவற்றின் சார்பில் தலைமைச் செயலகம் அருகில் இன்று(27-08-2022) நடைபெற்ற கடற்கரைத் தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை புதுச்சேரிக்கு வருகை தந்துள்ள மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றங்கள் துறை அமைச்சர் திரு. பூபேந்திர யாதவ் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்சட்டப்பேரவைத் தலைவர் திரு ஆர். செல்வம், மாநிலங்களவை உறுப்பினர் திரு செல்வகணபதி, மத்திய சுற்றுச்சூழல், வன அமைச்சகத்தின் கூடுதல் செயலர் திருமதி ரிச்சா ஷர்மா, தலைமைச் செயலர் திரு ராஜீவ் வர்மா, அறிவியல், தொழில்நுட்பம் & சுற்றுச்சூழல் செயலர் திருமதி ஸ்மிதா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய மத்திய அமைச்சர், 7500 கிலோ மீட்டர் தூர கடல் பரப்பைக் கொண்ட இந்தியாவின் கடலோரத் தூய்மையை மக்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும், வருங்கால சந்ததியினருக்குத் தூய்மையான கடற்கரையை நாம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். விடுதலையின் அமிர்த பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 75 நாட்கள் கடலோரப் பகுதிகளை தூய்மைப்படுத்தும் இயக்கம் நாடெங்கும் உள்ள 75 கடற்கரைகளில் மேற்கொள்ளப்படுவதாகவும், இப்பணிகள் பிரதமர் திரு நரேந்திர மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி நிறைவடையும் என்றும், அமைச்சர் குறிப்பிட்டார்.

புதுச்சேரி பிரோமினேட் கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கடலோரப் பகுதி தூய்மை விழிப்புணர்வு ஓட்டத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

கடலோரத் தூய்மையை வலியுறுத்தி நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் அவர் வழங்கினார்.

கடலோரத் தூய்மையை வலியுறுத்தும் உறுதிமொழியை டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஏற்க வைத்தார்.

 

ஏராளமான பள்ளி, தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவர்கள்தன்னார்வலர்கள், கடலோரப் பகுதியைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக இன்று காலை 6:00 மணிக்கு புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் பகுதியில் அமைந்துள்ள, நீலக் கொடி அந்தஸ்து சான்றிதழ் பெற்றுள்ள, ஈடன் கடற்கரைக்கு சென்று அங்கு கட்டமைப்பு வசதிகளை மத்திய அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், எதிர்காலத்தில் கடலில் மீன்களை விட நெகிழிக் குப்பையே அதிக அளவில் இருக்கும் என்று கூறப்படுவதாகவும், அதனைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை பிரதமர் அறிவித்திருப்பதோடு, அதற்கு அவரே முன்னோடியாகவும்  செயல்பட்டிருப்பதாகவும் கூறினார். தூய்மை இந்தியா திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பதில் புதுச்சேரியும் பங்கெடுத்துக் கொள்வது  மகிழ்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டார். நெகிழிக்  கழிவுகளைக் கடற்கரையிலும் கடலுக்குள்ளும் எரியக் கூடாது என்ற விழிப்புணர்வு அனைவருக்கும் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

•••••••••••••

 


(रिलीज़ आईडी: 1854817) आगंतुक पटल : 259
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Telugu