பிரதமர் அலுவலகம்
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தொழிலாளர் நல அமைச்சர்களின் தேசிய தொழிலாளர் மாநாட்டில் பிரதமரின் உரை
Posted On:
25 AUG 2022 6:24PM by PIB Chennai
வணக்கம்!
சண்டிகரின் நிர்வாகி திரு பன்வாரிலால் புரோஹித் அவர்களே, அமைச்சரவை நண்பர்களான திரு புபேந்தர் யாதவ் மற்றும் திரு ராமேஸ்வர் தெளி அவர்களே, அனைத்து மாநிலங்களின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்களே, செயலாளர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே! முதலில் பகவான் திருப்பதி பாலாஜியை தலை வணங்கி எனது உரையைத் தொடங்குகிறேன்.
ஆகஸ்ட் 15-ஆம் தேதி நம் நாடு விடுதலையின் 75-வது ஆண்டு நிறைவு செய்து சுதந்திரத்தின் ‘அமிர்த காலத்திற்குள்' நுழைந்தது. அமிர்த காலத்தில் வளர்ச்சி மிகுந்த இந்தியாவை கட்டமைப்பதற்கான கனவுகளையும், லட்சியங்களையும் நிறைவேற்றும் மிகப்பெரிய பொறுப்பு இந்திய தொழிலாளர்களிடம் உள்ளது. இத்தகைய எண்ணத்தோடு, அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்புசாரா துறையில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்காக நாம் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
பிரதமரின் ஷ்ரம்-யோகி மாந்தன், பிரதமரின் சுரக்ஷா பீமா மற்றும் பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா போன்ற பல்வேறு முன்முயற்சிகள் பணியாளர்களுக்கு பாதுகாப்பை வழங்கியுள்ளன. இது போன்ற திட்டங்களால் அமைப்புசாரா துறையில் பணியாற்றும் தொழிலாளர்களிடையே தங்களது கடின உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறது என்ற நம்பிக்கை எழுகிறது. தொழிலாளர்களுக்கு அதிகபட்சப் பலன்கள் கிடைக்கும் வகையில் மத்திய மற்றும் மாநிலங்களின் முன்முயற்சிகளை நாம் ஒருங்கிணைக்க வேண்டும்.
நண்பர்களே,
கொரோனா காலகட்டத்தில், அவசரகால கடன் உறுதி திட்டம், லட்சக்கணக்கான சிறு தொழில்களுக்கு உதவியுள்ளது. சுமார் 1.5 கோடி மக்களின் வேலையை இத்திட்டம் பாதுகாத்ததாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பணியாளர் வைப்பு நிதி நிறுவனம் கோடிக்கணக்கான ரூபாயை முன்கூட்டியே பயனாளிகளுக்கு வழங்கியது, கொவிட் காலகட்டத்தில் பேருதவியாக இருந்தது. தொழிலாளர்களுக்கு நாடு ஆதரவளித்ததை போல, பெருந்தொற்றிலிருந்து இந்தியா மீண்டு வர பணியாளர்கள் தங்களது முழு ஆற்றலையும் வெளிப்படுத்துகிறார்கள். உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா இன்று திகழ்வதற்கு முக்கிய காரணம் நமது தொழிலாளர்களே.
நண்பர்களே,
நாட்டின் ஒவ்வொரு தொழிலாளரையும் சமூக பாதுகாப்பு வரம்பிற்குள் கொண்டு வருவதற்கான சிறந்த முன்னுதாரணம், இ-ஷ்ரம் தளம். அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தளத்தில் 400 துறைகளைச் சேர்ந்த 28 கோடி பணியாளர்கள் பதிவு செய்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக கட்டுமான தொழிலாளர்கள், புலம்பெயர் பணியாளர்கள் மற்றும் இல்லங்களில் பணிபுரிவோர் அதிகமாக பயனடைந்துள்ளனர்.
மாநில தளங்களை தேசிய தளங்களுடன் ஒருங்கிணைக்குமாறு இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் நாட்டின் அனைத்து தொழிலாளர்களுக்கும் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு மாநிலங்களும் பயனடையும்.
நாட்டின் முழு திறனையும் வெளிக்கொணர்வதில் உங்கள் அனைவரின் கூட்டு முயற்சி மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் நான் உறுதியோடு இருக்கிறேன். இந்த நம்பிக்கையோடு உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி!
***************
(Release ID: 1854453)
(Release ID: 1854631)
Visitor Counter : 153
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam