விவசாயத்துறை அமைச்சகம்
இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் மத்திய வேளாண் அமைச்சர் கலந்து கொண்டார்
Posted On:
23 AUG 2022 5:49PM by PIB Chennai
பரேலியில் உள்ள இஷாக் நகரில் அமைந்துள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முழு அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
விடுதலையின் அமிர்தப் பெருவிழாவையொட்டி ஒவ்வொருவரும் தங்களது பழைய விருப்பங்களை பூர்த்தி செய்து புதிய உறுதி மொழிகளை ஏற்க வேண்டும் எனக் கூறிய அவர், இந்தியா தனது நூற்றாண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது, உலகில் மிகச்சிறந்த நாடாக உருவாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்கு அனைவரும் சேர்ந்து பாடுபட வேண்டியது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று பட்டம் பெற்றவர்களை பாராட்டிய திரு தோமர், இளைஞர்களின் முன்னேற்றத்தில் கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார்.
இந்தியாவில் 535.78 மில்லியன் கால்நடைகளும், 851.18 மில்லியன் பறவைகளும் இருப்பதாகக் கூறிய அவர், மக்கள் தொகை அளவுக்கு இவற்றின் எண்ணிக்கை உள்ளதாகக் குறிப்பிட்டார்.
கால்நடை வளர்ப்பு, தேனி வளர்ப்பு, மீன்வளம் உள்ளிட்ட விவசாயத்துடன் தொடர்புடைய துறைகளில் கவனம் செலுத்தினால்தான், வேளாண்மை துறை வளர்ச்சி அடையும் என்றும் திரு தோமர் குறிப்பிட்டார். வேளாண்மையுடன் நாட்டின் வளர்ச்சிக்கு இந்தத் தொழில்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார். விலங்குகளின் இனப்பெருக்கத்தை அதிகரித்து அவற்றை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டியது இப்போதைய தேவை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண் துறை இணையமைச்சர் திரு கைலாஷ் சௌத்ரி, முன்னாள் மத்திய அமைச்சர் திரு சந்தோஷ்குமார் கங்குவார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1853899
***************
(Release ID: 1853934)
Visitor Counter : 204