ஆயுஷ்
தாம்பரம் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய கட்டிடம் மற்றும் புறநோயாளி பிரிவை மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு.சர்பானந்தா சோனோவால் திறந்து வைத்தார்
இளம் தலைமுறையினர் (மருத்துவர்கள்) பாரம்பரிய மருத்துவத்தை உலக அளவில் எடுத்துச் செல்ல வேண்டும் - அமைச்சர் வலியுறுத்தல்
பாரம்பரிய மருத்துவத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - சோனோவால் புகழாரம்
Posted On:
13 AUG 2022 5:07PM by PIB Chennai
தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் அயோத்திதாஸ பண்டிதர் மருத்துவமனையின் புதிய சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய மையத்தின் தலைமையக அலுவலகக் கட்டிடம் மற்றும் புதிய புறநோயாளிகள் பிரிவை மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்தக்கட்டிடங்களின் கட்டுமானமும் சித்த மருத்துவ முறையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஆயுஷ் அமைச்சகத்தால் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த புதிய தலைமையக அலுவலகம் அனைத்து வகையிலும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் என்று அவர் கூறினார்.
சித்த மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மாபெரும் தமிழ் சித்தர் "அகத்தியர்" சிலை நிறுவப்பட்டு புனிதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சித்தா மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் என்பது ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள சித்தா முறை மருத்துவ ஆராய்ச்சிக்கான ஒரு உச்ச அமைப்பாகும். அதன் முதன்மையான கவனம் சித்தர்களின் உலகளாவிய கூற்றுகளை அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்துவதாகும்.
இதுவரை 10 காப்புரிமைகள் சிசிஆர்எஸ் மூலம் தாக்கல் செய்யப்பட்டு 623 அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த சித்தா புற்றுநோய் வெளிநோயாளி பிரிவு அகில இந்திய ஆயுர்வேத நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வருகிறது . சித்தா அமைப்பின் மூலம் புற்றுநோயாளிகளின் நோய்த்தடுப்பு சிகிச்சைக்கு உதவுவதில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
விடுதலையின் அமிர்தப்பெருவிழா திட்டத்தின் ஒரு பகுதியாக, சிசிஆர்எஸ் மற்றும் என்ஐஎஸ் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு அமுக்கரா சூரணம் மாத்திரைகளை வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
பாரம்பரிய மருத்துவத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை நான் அறிவேன். கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் தமிழக அரசு செயல்பட்டதையும் நான் நன்கு அறிவேன். இதற்காக தமிழக அரசுக்கு நன்றி.
இன்றைய இளம் மருத்துவர்கள் நமது பாரம்பரிய மருத்துவத்தை உலக அளவில் எடுத்துச் செல்ல வேண்டும். அவர்கள் உள்ளூர், உள்நாடு என்றில்லாமல் உலக அளவில் வீறுநடை போட வேண்டும் என அமைச்சர் சர்பானந்த சோனோவால் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் சிசிஆர்எஸ்சின் சாதனைகள் மற்றும் அகத்தியரின் குணவாகுடம் உள்ளிட்ட நூல்களை மத்திய அமைச்சர் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா. சுப்பிரமணியன்,
தாம்பரம் மாநகராட்சி மேயர் திருமதி கே.வசந்தகுமாரி, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ்.ஆர்.ராஜா, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குநர் கே.கனகவல்லி, இயக்குநர் ரா. மீனாகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
******
(Release ID: 1851576)
Visitor Counter : 753