பாதுகாப்பு அமைச்சகம்

வீர் கதா போட்டியில் வென்ற 25 பேருக்கு புதுதில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டு

Posted On: 12 AUG 2022 4:27PM by PIB Chennai

விடுதலையின் அமிர்தப்பெருவிழாவையொட்டி, ஆயுதப் படையினரின் தீரச் செயல்கள், தியாகங்கள் ஆகியவை குறித்து குழந்தைகளிடையே விழிப்புணர்வை பரப்பும் வகையில், வீர் கதா என்னும் தனித்துவமான நிகழ்ச்சிகளில் ஒன்று நடத்தப்பட்டது. இதனையொட்டி, கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி முதல் நவம்பர் 20ம் தேதி  வரை நாடு முழுவதும் நடத்தப்பட்ட போட்டிகளில், 4788 பள்ளிகளைச்சேர்ந்த 8.04 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள், கட்டுரைகள், கவிதைகள், ஓவியங்கள் ஆகியவற்றை படைத்து கலந்து கொண்டனர். பல்வேறு சுற்று மதிப்பீட்டிற்கு பின்னர் 25 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சூப்பர் 25 என்ற பெயரில் அறிவிக்கப்பட்டனர்.

இந்த 25 மாணவர்களை புதுதில்லியில் இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டி கௌரவித்தார். ஒவ்வொருவருக்கும் ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பரிசும், ஒரு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட், விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் வி ஆர் சௌத்ரி, கடற்படை தளபதி அட்மிரல் ஆர். ஹரிக்குமார், பாதுகாப்புத்துறை செயலர் டாக்டர் அஜய்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ராணுவ பள்ளிகள், கண்டோன்மெண்ட் வாரியம் ஆகியவற்றைச்சேர்ந்த 300 தேசிய மாணவர் படையைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர். 400க்கும் மேற்பட்ட பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காணொலி மூலம் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர், மாணவர்களின் திறமைகளையும், படைப்பாற்றலையும் பாராட்டினார்.  விடுதலைப் போராட்ட வீரர்கள், பகத் சிங், சந்திரசேகர் ஆசாத், குதிராம் போஸ் போன்றவர்களின் தியாகத்தையும், தீரத்தையும் சித்தரித்த மாணவர்களை பாராட்டினார். இந்த அச்சமற்ற விடுதலைப் போராட்ட வீரர்கள், ராணுவ வீரர்கள், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களது அன்புக்கு பாத்தியமானது ஒரே இந்தியாவாகும். நாட்டுப்பற்று என்ற பொது நூல் மூலம் அவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

இந்த போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் நாட்டுப்பற்று என்ற உணர்வு இருந்ததாக கூறிய திரு ராஜ்நாத் சிங், இந்த போட்டி பெரும் வெற்றியைப் பெற்றதாக கூறினார்.  தேசப் பிதா மகாத்மா காந்தி, மாரத்திய பேரரசை நிறுவிய சத்ரபதி சிவாஜி, பகத் சிங் அஸ்பாக்உல்லா கான், முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி போன்ற விடுதலைப்போராட்ட வீரர்களின்  தியாகங்களை  மாணவர்கள் தங்களுக்கு உந்து சக்தியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணலாம். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1851261

***************



(Release ID: 1851313) Visitor Counter : 171


Read this release in: English , Urdu , Hindi , Marathi