கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
100% தனியார் நிலஉரிமை கொண்டிருக்கும் நாட்டின் முதலாவது பெரும் துறைமுகமாக ஜவஹர்லால் நேரு துறைமுகம் மாறியுள்ளது
Posted On:
19 JUL 2022 11:52AM by PIB Chennai
ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் தொடங்கி, இந்திய துறைமுகங்களில் அரசு-தனியார் பங்களிப்பு முறை கடந்த 25 ஆண்டுகளில் அபாரமான முன்னேற்றத்தை பதிவு செய்து, உற்பத்தி மற்றும் கொள்ளளவின் திறனை அதிகரித்துள்ளன. அரசு- தனியார் பங்களிப்பு மாதிரியில் இயங்கும் ஜவஹர்லால் நேரு துறைமுகம், நாட்டின் முதலாவது 100% தனியார் நிலஉரிமை கொண்டிருக்கும் துறைமுகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
நாட்டின் முன்னணி கொள்கலன் துறைமுகங்களுள் ஒன்றான ஜவஹர்லால் நேரு துறைமுகம், உலகளவில் தலைசிறந்த முதல் 100 துறைமுகங்களுள் 26-ஆம் இடம் வகிக்கிறது. தற்போது இங்கு இயங்கும் ஐந்து கொள்கலன் முனையங்களில் ஒன்று மட்டுமே துறைமுகத்திற்கு சொந்தமானது. நவீன வசதிகளுடன் இந்த துறைமுகம் அனைத்து சர்வதேச தரநிலைகளுக்கு உட்பட்டதாக இருப்பதுடன், சாலை மற்றும் ரயில் மார்க்கமாக எளிதில் சென்றடையவும் ஏதுவாக உள்ளது. முக்கிய நகரங்களான மும்பை, புனே, நாசிக், விமான நிலையம், தங்கும் விடுதிகள் போன்ற இடங்களுடன் சுமூகமான இணைப்பு, இந்த துறைமுகத்தை தனித்துவம் வாய்ந்த முனையமாக மாற்றியுள்ளது.
ஜவஹர்லால் நேரு துறைமுக கொள்கலன் முனையம் தற்போது 9000 டி.இ.யு. கப்பல்களைக் கையாள்வதோடு, தரம் உயர்த்தப்பட்ட பிறகு 12200 டி.இ.யு. கப்பல்களைக் கையாளும் திறனைப் பெறும்.
இந்த சாதனை குறித்து கருத்து தெரிவித்த மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் தனியார் துறையினரை சாதகமான பங்குதாரர்களாக, அரசு-தனியார் பங்களிப்பு முறை ஈடுபடுத்தும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் கருத்துக்கு ஏற்ப இந்த திட்டம், உற்பத்தியை மேம்படுத்தும் என்று தெரிவித்தார். மேலும் 2020-21-ஆம் ஆண்டில் 1.5 மில்லியன் டி.இ.யு.-ஆக இருந்த துறைமுகத்தின் மொத்த கையாளும் திறன், 1.8 மில்லியன் டி.இ.யு.-ஆக உயரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1842587
***************
(Release ID: 1842646)
Visitor Counter : 246