தேர்தல் ஆணையம்
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் அனுப்பப்பட்டன
Posted On:
12 JUL 2022 3:09PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 2022 ஜூலை 18 ஆம் தேதி நடக்க உள்ளது. இதற்காக வாக்குப் பெட்டிகள், வாக்குச் சீட்டுகள், சிறப்பு பேனா மற்றும் சீலிடப்பட்ட தேர்தல் பொருட்கள் புதுதில்லி, புதுச்சேரி உள்பட அனைத்து மாநில சட்டபேரவை செயலகங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டன.
தேர்தலுக்கான பொருட்களை பாதுகாப்பாக குறிப்பிட்ட நேரத்தில் அனுப்பி வைப்பதற்கான பயிற்சி புதுதில்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் 2 நாட்கள் நடந்தது. இதில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
தேர்தல் பொருட்களை பெறுவதற்காக புதுதில்லி வருகை தரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உதவுவதற்காக உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பொருட்கள் பெற்று வரும் உதவி தேர்தல் அதிகாரிகளுக்கு தில்லி காவல்துறை பாதுகாப்பு அளிக்கும். வாக்குப்பெட்டிக்கு விமானத்தில் தனி டிக்கெட் மூலம் ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர், கடுமையான நடவடிக்கை மூலம் சரியாக தேர்தல் நடத்தப்பட்டு வருவதால் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஹால்மார்க் முத்திரை மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது என்றார். மேலும், தேர்தல் முழுமையாக நிறைவு பெறும் வரை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்றார். வாக்குப் பெட்டிகள், வாக்கு சீட்டுகள் ஆகியவற்றை கொண்டு வருதல், பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளில் அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டுமென தெரிவித்தார்.
வாக்குப் பெட்டிகள் மாநில தலைநகரை அடைந்த பிறகு கிருமி நீக்கம் செய்யப்பட்ட அறையில், பெட்டிகள் வைக்கப்பட்டு அறை பூட்டி சீலிடப்பட்டு வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1840921
***************
(Release ID: 1841008)
Visitor Counter : 187