குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

சமஸ்கிருதம் கற்பதற்கு புத்துயிரூட்ட மக்கள் இயக்கம் தொடங்கப்பட வேண்டுமென குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்

Posted On: 09 JUL 2022 6:09PM by PIB Chennai

சமஸ்கிருத மொழியை கற்பதற்கு புத்துயிரூட்ட, மக்கள் இயக்கம் தொடங்கப்படுவதுடன்,  இந்தியாவின் மிகவும் பழமையான செம்மொழி இலக்கியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மீள் உருவாக்கம் செய்ய, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் பாடுபட வேண்டுமென, குடியரசு துணைத்தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.   “அரசியல் சட்ட விதிமுறைகளாலோ அல்லது அரசாங்க உதவி அல்லது பாதுகாப்பு மூலம் மட்டும், ஒரு மொழியை பாதுகாத்துவிட முடியாது“  என்றும் அவர் கூறியுள்ளார்.  

பெங்களூருவில் இன்று, கர்நாடக சமஸ்கிருத பல்கலைகழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழா மற்றும் பத்தாம் ஆண்டு விழாவில் உரையாற்றிய  குடியரசு துணைத்தலைவர்,   குடும்பம் குடும்பமாக, சமுதாய அளவில் மற்றும் கல்வி நிறுவனங்களால் தான், அந்த மொழி உயிர்ப்புடன் திகழ்வதோடு, அதனை பரப்பவும் முடியும் என்றார்.   தொழில்நுட்பம் வேகமாக மாறி வருவதை சுட்டிக்காட்டிய அவர்,  சமஸ்கிருதம் உள்ளிட்ட நமது செம்மொழிழுகளைப் பாதுகாத்து, அதனை பரவச் செய்வதற்கு, தொழில்நுட்பம் ஏராளமான வாய்ப்புகளுக்கு வழிவகுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.   “பண்டைக்கால கையெழுத்துப் பிரதிகள், ஓலைச்சுவடிகள் மற்றும் கல்வெட்டுகளை டிஜிட்டல் மயமாக்கி, வேதம் ஓதுவதை பதிவு செய்வதோடு, பண்டைக்கால சமஸ்கிருத கட்டுரைகளின் அர்த்தம் மற்றும் முக்கியத்துவத்தை  புத்தகங்களாக வெளியிடுவது தான், சமஸ்கிருத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள நமது கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கான வழிமுறையாகும்“ என்றும் அவர் குறிப்பிட்டார்.  

சமஸ்கிருதம், நம் நாட்டின் அழிக்கமுடியாத பாரம்பரியம் என்று கூறிய குடியரசு துணைத்தலைவர், அது நமது அறிவாற்றல் மற்றும் இலக்கியப் பாரம்பரியத்தின் ஊற்றுக்கண் என்றார்.   “இந்தியாவின் ஆன்மாவை உணர்ந்துகொள்ள சமஸ்கிருதம் நமக்கு உதவுகிறது.  ஒருவர், இந்திய உலகக் கண்ணோட்டத்தை அறிந்துகொள்ள, அவர் சமஸ்கிருதத்தை கற்பது அவசியம்“  என்றும் அவர் வலியுறுத்தினார்.   இந்தியக் கவிஞர்களின் இலக்கியத் தொன்மையை பாராட்டவும்,  நம் நாட்டின் நாகரீக செழுமை பற்றி ஆராய்ச்சி செய்யவும்,  அவர் சமஸ்கிருத மாணவராக இருக்க வேண்டும் எனவும் திரு.நாயுடு தெரிவித்தார்.   

கர்நாடக மாநிலம்,  ஆதி சங்கரர், ஸ்ரீ ராமானுஜாச்சார்யா, ஸ்ரீ மத்வாச்சார்யா மற்றும் ஸ்ரீ பசவேஸ்கரா போன்ற மாபெரும் மகான்கள் மற்றும் சிந்தனையாளர்களின் பூமி என்று குறிப்பிட்ட திரு.நாயுடு, தனது பண்டைக்கால பொக்கிஷமான அறிவாற்றல் மற்றும் ஞானத்தைப் பாதுகாப்பதற்காகவும் அம்மாநிலத்திற்கு பாராட்டு தெரிவித்தார்.  

இந்த விழாவில், தலைசிறந்த அறிஞர்களான ஆச்சார்யா பிரத்யும்னா, டாக்டர் வி.எஸ்.இந்திராம்மா மற்றும் வித்வான் உமாகாந்த பட் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களையும், குடியரசு துணைத்தலைவர் வழங்கினார். 

குடியரசு துணைத்தலைவர் உரையை முழுமையாகப் படிக்க இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் :   https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1840386 

*****


(Release ID: 1840437) Visitor Counter : 205


Read this release in: English , Urdu , Hindi , Kannada