தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
ஹைதராபாத் சனத்நகரில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியின் முதல் குழு மருத்துவ மாணவர்களின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது
Posted On:
18 JUN 2022 4:35PM by PIB Chennai
சனத்நகரில் உள்ள தொழிலாளர் காப்பீட்டு நிறுவன மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி மற்றும் மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு,பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் டெலி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, இன்று மருத்துவர்களாக பட்டம் பெற்ற 100 மாணவர்களின் முதல் குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
கல்லூரியின் எம்பிபிஎஸ் பட்டதாரிகளின் முதல் தொகுதி (2016-2017)க்கான மெரிட் விருதுகள் அமைச்சர்களால் வழங்கப்பட்டது.
இன்று பட்டம் பெற்ற இளம் மருத்துவர்களை வாழ்த்திப் பேசிய திரு பூபேந்தர் யாதவ், மருத்துவச் சேவைகள் சமுதாயத்திற்குச் சிறந்த வழிகளில் ஒன்றாக இருக்கும் அதே வேளையில், தொழிலாளர்களின் நல்வாழ்வைப் பூர்த்தி செய்யும் ஒரு நிறுவனமாக தனது நிறுவனத்தை நினைவில் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், அனைத்து இஎஸ்ஐசி மருத்துவமனைகளையும் நவீனமயமாக்க அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், அதன்படி ஹைதராபாத்தில் உள்ள இஎஸ்ஐசி-க்கு புதிய ஆய்வகம் மற்றும் அணு மருந்து ஆய்வகம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சனத்நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையின் பணியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் மருத்துவ சேவைகளின் தரம் குறித்து உள்ளூர் எம்.பி.யும், மத்திய அமைச்சருமான திரு கிஷன் ரெட்டி மகிழ்ச்சி தெரிவித்தார். மருத்துவமனைக்கு தனது முந்தைய வருகைகளை நினைவுகூர்ந்த அவர், கோவிட் -19 தொற்றுநோய்களின் போது இஎஸ்ஐ பயனாளிகளுக்கு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் மருத்துவமனை தன்னலமற்ற சேவையை வழங்கியுள்ளது என்று கூறினார்.
•••••••••••••
(Release ID: 1835117)
Visitor Counter : 194