குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
எஸ் பி பாலசுப்ரமணியம் இந்தியாவின் மாண்புகள் மற்றும் கலாச்சாரத்தின் உருவமாகத் திகழ்ந்தவர்: குடியரசு துணைத் தலைவர்
பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் வாழ்க்கை குறித்த புத்தகம் மற்றும் ஆவணப்படத்தைக் குடியரசு துணைத்தலைவர் வெளியிட்டார்
Posted On:
10 JUN 2022 7:29PM by PIB Chennai
எஸ் பி பாலசுப்ரமணியம் தமது இனிய குரலால் இந்த வண்ணமயமான உலகத்தை மட்டும் ஆட்சி செய்யவில்லை என்றும் அவர் இந்தியாவின் மாண்புகள் மற்றும் கலாச்சாரத்தின் உருவமாகவும் திகழ்ந்தார் என்றும் குடியரசு துணைத்தலைவர் திரு எம். வெங்கய்யா நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார். அவர் அனைவருக்கும், குறிப்பாக இளைய தலைமுறைக்கு எப்போதும் உந்துசக்தியாக இருப்பார் என்றும் கூறினார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் வாழ்க்கை குறித்த நூல் மற்றும் ஆவணப்படத்தை ஐதராபாதில் வெளியிட்டுப் பேசிய குடியரசு துணைத் தலைவர், இந்திய கலாச்சாரத்தையும் பழக்க வழக்கங்களையும் எதிர்காலத் தலைமுறைகளுடன் இணைப்பதை உறுதி செய்வதும் வழிகாட்டுவதும்தான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்று குறிப்பிட்டார்.
நூலின் முதல் பிரதியைப் பிரபல திரைப்பட நடிகர் திரு கமலஹாசனிடம் குடியரசு துணைத் தலைவர் வழங்கினார். ஆவணப்படத்தின் தயாரிப்பாளர் சிறு சஞ்சய் கிஷோர், நூலின் ஆசிரியர் திரு பி எஸ் கோபாலகிருஷ்ணன் ஆகியோரை அவர் பாராட்டினார். தெலுங்கு நூல்களைப் பதிப்பித்து கலையையும் கலாச்சாரத்தையும் பாதுகாத்து, பிரபலப்படுத்தும் திரு வர பிரசாத் ரெட்டியையும் அவர் பாராட்டினார்.
மறைந்த பாடகர் பன்முக ஆளுமை கொண்டவர் என்று கூறிய திரு நாயுடு, புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் என்பதற்கு அப்பால் அவர் இசையமைப்பாளராக, திரைப்பட இயக்குனராக, நடிகராகத் திகழ்ந்தவர் என்றார். பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தமது ஊக்கமளிக்கும் வார்த்தைகளாலும் வெளிப்படுத்திய அன்பாலும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஈர்த்தவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எஸ் பி பாலசுப்ரமணியம் மிக உயர்ந்த கலாச்சாரத்தையும் எளிமையையும் கொண்டவர் என்றும் நட்பான குணம்படைத்தவர் என்றும் அவர் தெரிவித்தார். இவர் கொண்டிருந்த குணங்களால் அனைவராலும் மதிக்கப்பட்டவர். இவரது ஆளுமையைக் கட்டமைப்பதில் இவரின் தந்தையான திரு சாம்பமூர்த்தி மிக முக்கிய பங்கு வகித்ததை திரு நாயுடு நினைவுகூர்ந்தார்.
ஆந்திரப் பிரதேசம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள தமது குடும்பத்தின் பூர்வீக வீட்டினைத் தந்தையின் நினைவாக வேதபாடசாலையாக மாற்றிய எஸ் பி பாலசுப்ரமணியம் செயலையும் குடியரசு துணைத் தலைவர் பாராட்டினார்.
இந்தியாவை மென்மையான சக்தியாக முன்னிறுத்தியதில் இந்திய கலாச்சாரத்திற்கும், இசைக்கும், திரைப்படங்களுக்கும், நூல்களுக்கும் மிகப்பெரும் பங்கு உண்டு என்பதை சுட்டிக்காட்டிய திரு நாயுடு இந்தியாவின் கலாச்சாரம் பாரம்பரியங்கள் மொழிகள் ஆகியவற்றைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும் இதற்கு இளம் தலைமுறையினர் தலைமை ஏற்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்
*****
(Release ID: 1833132)
Visitor Counter : 186