மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசின் 8 ஆண்டுகள்: டிடி நியூஸ் மாநாட்டில் மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா பங்கேற்பு

Posted On: 10 JUN 2022 11:16AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 8 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதை முன்னிட்டு, “மோடி அரசின் எட்டு ஆண்டுகள்: எத்தனை கனவுகள் நனவாகியுள்ளன” என்ற தலைப்பில் ஜூன் 3 முதல் 11 வரை ஒருவார கால செய்தி மாநாட்டிற்கு டிடி நியூஸ் ஏற்பாடு செய்துள்ளது. ஜூன் 8-ஆம் தேதி நடைபெற்ற மாநாட்டில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா கலந்து கொண்டார்.

நேர்காணலின் போது பேசிய அமைச்சர், அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக அரசின் முன்னுரிமையாக விளங்கும் விவசாயிகளின் நலன் உள்ளிட்டவற்றில் அறிவியல் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி எப்போதும் ஊக்குவித்து வருவதாகக் குறிப்பிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோதே இது போன்ற பணிகளில் அவர் ஈடுபட்டதாகவும், விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்ததுடன், கிரிஷி மகோத்சவத்தை அறிமுகப்படுத்தி, விலங்குகளுக்கு அவசர ஊர்தி,  நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவு முதலியவற்றை திரு மோடி தொடங்கியதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். தற்போது பிரதமரின் கிசான் திட்டத்தின் 11-வது தவணையின் கீழ் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 2 லட்சம் கோடி நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பால்வளத் துறையில் சேவை மற்றும் தொழில்முனைவை ஊக்குவிப்பதற்காக வளர்ப்பு பண்ணைகள் மற்றும் பால் உற்பத்திப் பிரிவுகளுக்கு ஆதரவளிப்பதற்காக 50% மானியமும் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் வலிமை பற்றி பேசுகையில், குஜராத்தில் உள்ள அமுல் நிறுவனம், இந்திய கிராமங்களுக்கு நாள்தோறும் சுமார் ரூ. 125 கோடியை அளிப்பது மாபெரும் வெற்றியின் எடுத்துக்காட்டுகளுள் ஒன்று என்று திரு பர்ஷோத்தம் ரூபாலா கூறினார். விவசாயத்தின் இதர துறைகளிலும் இதை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீன்வளத் துறையில் அரசு அறிமுகப்படுத்தியுள்ள பிரதமரின் மத்ஸ்ய சம்படா திட்டத்தினால் மீனவர்களுக்கு முதன்முறையாக கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதோடு, தொழில்முனைவு, மீன்களை எடுத்துச்செல்வது, வாழ்வாதாரம் முதலியவற்றுக்கான ஆதரவும் நீட்டிக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1832798

***************


(Release ID: 1832819) Visitor Counter : 185