குடியரசுத் தலைவர் செயலகம்

மகரில் சந்த் கபீருக்கு குடியரசுத் தலைவர் மரியாதை; சந்த் கபீர் அகாடமி மற்றும் ஆராய்ச்சி மையம், ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தைத் திறந்துவைப்பு

Posted On: 05 JUN 2022 1:02PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், உத்தரப் பிரதேசத்தின் மகரில் உள்ள கபீர் சௌரா தாமில் சந்த் கபீருக்கு இன்று மரியாதை செலுத்தியதுடன் சந்த் கபீர் அகாடமி மற்றும் ஆராய்ச்சி மையம், ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

 

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், பிரதமர் திரு நரேந்திர மோடியால் 4 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்ட சந்த் கபீர் அகாடமி மற்றும் ஆராய்ச்சி மையத்தைத் திறந்து வைப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். சந்த் கபீர், ஓர் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்த போதிலும் அதை பலவீனமாகக் கருதாமல், சக்தியாக  மாற்றிக் கொண்டார் என்று குடியரசுத் தலைவர் புகழாரம் சூட்டினார். புத்தக அறிவு சந்த் கபீருக்கு மறுக்கப்பட்ட போதும், துறவிகளுடனான அவரது தொடர்பின் மூலம் அனுபவ அறிவை அவர் பெற்றார். முதலில் தாமே அந்த அறிவை தம்மீது சோதித்துக் கொண்டு, பிறகு மக்களிடம் அதை எடுத்துச் சென்றதாக திரு ராம் நாத் கோவிந்த் கூறினார். அதனால்தான் அவரது போதனைகள் இன்றும் பெருந்திரளான மக்கள் மற்றும் அறிவாளிகளிடையே சம அளவில் புகழ் பெற்றுள்ளன.

 

சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்திற்கான பாதையை சமூகத்திற்கு சந்த் கபீர்  வகுத்துத் தந்ததாகக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். சமூகத்தில் நலிவடைந்த பிரிவினர் மீது இரக்கம் மற்றும் கருணை காட்டாமல் மனித இனம் பாதுகாக்கப்படாது என்று அவர் எப்போதும் வலியுறுத்தினார்.  ஆதரவற்ற மக்களுக்கு உதவாமல், சமுதாயத்தில் நல்லிணக்கம் ஏற்படாது.

 

சந்த் கபீரின் முழு வாழ்க்கை, மனித இனத்தின் சிறந்த உதாரணம் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். துறவிகள், ஆசிரியர்கள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகள் தொடர்ந்து சமூக அவலங்களை நீக்கி வருவது இந்தியாவிற்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று கூறிய குடியரசுத் தலைவர், சமூகத்தால் முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட துறவிகளுள் சந்த் கபீரும் ஒருவர் என்று தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1831268

 

***************



(Release ID: 1831298) Visitor Counter : 177