பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அமெரிக்க அதிபருடனான இருதரப்பு சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொடக்க உரை

Posted On: 24 MAY 2022 5:29PM by PIB Chennai

திரு அதிபர் அவர்களே, உங்களை சந்திப்பதில் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நாம் மற்றொரு  ஆக்கப்பூர்வமான மற்றும் பயனுள்ள குவாட் உச்சிமாநாட்டிலும் ஒன்றாக பங்கேற்றோம்.

இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு உண்மையிலேயே நம்பிக்கையின் கூட்டுறவாகும்.

பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நமது பகிர்ந்து கொள்ளப்பட்ட விழுமியங்களும், பொதுவான நலன்களும், இந்த நம்பிக்கையின் பிணைப்பை வலுப்படுத்தியுள்ளது.  நமது மக்களுக்கிடையிலான உறவுகள், நெருங்கிய பொருளாதார உறவுகள் ஆகியவையும் நமது கூட்டாண்மையை தனித்துவமாக்கியுள்ளது.

நமக்கிடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடு, நமது ஆற்றலுக்கு இன்னும் கீழே உள்ளபோதிலும், அவை  தொடர்ந்து விரிவாகி வருகிறது. 

நமக்கிடையிலான இந்தியா-அமெரிக்கா முதலீட்டு ஊக்குவிப்பு ஒப்பந்தத்தின் மூலம், முதலீட்டு திசையின் வலுவான முன்னேற்றத்தை நாம் நிச்சயம் காண்போம் என்று நான் உறுதியாக கூறுகிறேன்.

தொழில்நுட்பத்துறையில் நாம் நமது இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரித்து வருகிறோம். அதே போல உலக விஷயங்கள் குறித்தும் பரஸ்பர ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி வருகிறோம்.

இந்தோ பசிபிக் பிராந்தியம் குறித்து ஒரே விதமான கண்ணோட்டத்தை நமது இருநாடுகளும் பகிர்ந்துள்ளன.  இருதரப்பு அளவில் மட்டுமல்லாமல், ஒருமித்த கருத்துடைய பிற நாடுகளுடனும், நமது பகிர்ந்து கொள்ளப்பட்ட விழுமியங்கள் மற்றும் பொதுவான நலன்களை பாதுகாக்க நாம் உழைத்து வருகிறோம். குவாட் மற்றும் ஐபிஇஎஃப் நேற்று அறிவித்தவை இதற்கு உதாரணங்களாகும். இன்று நமது விவாதம், இந்த ஆக்கப்பூர்வமான உத்வேகத்தை பெரும் வேகத்துடன் கொண்டுசெல்ல உதவும்.

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான நட்புறவு உலக அமைதி, பூமிக்கோளின் நிலைத்தன்மை, மனிதகுலத்தின் நலன் ஆகியவற்றுக்கு சிறந்த ஆற்றலுடன் தொடரும் என்பதில் எனக்கு நம்பிக்கையுள்ளது.

பொறுப்பு துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழி பெயர்ப்பாகும். மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.

***************


(Release ID: 1828030)