குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குண்டல்தாம் ஸ்ரீ சுவாமி நாராயண் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளையோர் முகாமில் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வீடியோ செய்தி மூலம் குடியரசுத் தலைவர் உரையாற்றினார்

Posted On: 21 MAY 2022 2:06PM by PIB Chennai

குண்டல்தாம் ஸ்ரீ சுவாமி நாராயண் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளையோர் முகாமில் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வீடியோ செய்தி மூலம் குடியரசுத் தலைவர் இன்று (மே 21, 2022) உரையாற்றினார்.

 

சமூகத்தின் மேம்பாட்டிற்கும் தேசத்தின் முன்னேற்றத்திற்கும் இளைஞர்கள் முக்கியமான பங்களிப்பு செய்கிறார்கள் என்று குடியரசுத் தலைவர் தமது உரையில் கூறினார். சுமூகமான, போதைப்பொருள் பழக்கமற்ற வாழ்க்கையை நடத்த அவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் வழங்குவது தேவையாக உள்ளது. இளைய தலைமுறையினரிடம் இந்தியக் கலாச்சாரத்தின் வாழ்க்கை மாண்புகளை வேரூன்றச்செய்யும் புனித நோக்கத்தோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இளையோர் முகாமில் உரையாற்ற மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறினார்.

 

கோயில்களும் ஆசிரமங்களும் நமது நம்பிக்கையின், வாழ்க்கைக் கட்டமைப்பின் மையங்களாக உள்ளன என்று கூறிய குடியரசுத் தலைவர் ஏழைகளுக்கு உதவி செய்வது மற்றும் நோயாளிகளின் துயரங்களைக் குறைப்பதன் மூலம் தேச சேவை செய்யும் மையங்களாகவும் அவை இருக்கின்றன. இயற்கைச் சீற்றங்களின்போது இலவசமாக உணவு வழங்குதல், ஏழைகளுக்கு மருந்துப் பொருட்கள் வழங்குதல், பெருந்தொற்று காலத்தில் இந்தக் கோவிலை மருத்துவமனையாக மாற்றுதல் ஆகியவை மூலம் தேவைப்படுவோருக்கு உதவிகள் வழங்கி தேச சேவையின் சிறப்புமிக்க உதாரணத்தைக் குண்டல்தாம் ஸ்ரீ சுவாமிநாராயண் ஆலயம் ஏற்படுத்தி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

 

காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ள நமது பாரம்பரிய ஊரக வாழ்க்கை முறை வழிகாட்ட முடியும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் மூலம், கருணையோடு இயற்கையைக் கையாள்வதன் மூலம் இந்தப் புவியை நாம் பாதுகாக்க முடியும். நமது நதிகள், குளங்கள், மரங்கள் மற்றும் அனைத்து உயிரினங்களைப் பாதுகாப்பதன் மூலம் மனிதகுலத்தை நாம் காப்பாற்ற முடியும். கீர் இன பசுக்கள் கவனிப்பு, ஆறு பாதுகாப்பு, மரக்கன்றுகள் நடுதல், இயற்கை வேளாண்மை, ஆலய வளாகத்தில் ஆயுர்வேத மற்றும் மூலிகை மருந்துச் செடிகளைப் பயிரிடுதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பல்வேறு முன்முயற்சிகளை குண்டல்தாம் ஸ்ரீ சுவாமி நாராயன் ஆலயம் மேற்கொள்வதை அவர் பாராட்டினார்.

**********


(Release ID: 1827190) Visitor Counter : 183