பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
வேளாண்மைத் துறையில் இருந்து உற்பத்தித் துறைக்கு மாறுவது ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்கு முக்கியம்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
11 MAY 2022 6:11PM by PIB Chennai
அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் ஒட்டுமொத்த வளத்திற்கும் வேளாண்மைத் துறையில் இருந்து உற்பத்தித் துறைக்கு மாறுவது ஜம்மு-காஷ்மீருக்கு முக்கியம் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மேயர்கள், நகராட்சி தலைவர்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைமை அதிகாரிகளுக்கான நகர்ப்புற ஆளுகை குறித்த பயிலரங்கில் பேசிய அமைச்சர், நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து வலியுறுத்தியதோடு, யூனியன் பிரதேசத்தில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நகரங்கள் பொருளாதார நடவடிக்கைகளில் முக்கியப் பங்காற்றும் என்று கூறினார்.
நகர்ப்புற உள்கட்டமைப்பை உருவாக்குவதிலும், குறிப்பாக வேளாண் விளைபொருட்கள், நெசவுத்தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் உள்ளிட்ட துறைகளில் பொருளாதார வளர்ச்சிக்கும் சிறிய மற்றும் நடுத்தர நகரங்கள் உதவும் என்று அமைச்சர் கூறினார்.
உள் கட்டமைப்பு மேம்பாடு, வாழ்க்கை தரத்தை மேம்படுத்துதல், போக்குவரத்து, தண்ணீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட நகர்ப்புறத் திட்டங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார்.
ஜம்மு-காஷ்மீரின் பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீடுகளுக்கு கடந்த மூன்று வருடங்களில் குறிப்பிடத்தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், மாநிலத்தின் பொருளாதாரத்தில் இந்த நடவடிக்கைகள் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் என்றும் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பெரிய திட்டங்களை வைத்துள்ளதாகவும், 74-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை நிறுவி உள்ளதாகவும் கூறினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் இந்திய அரசின் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள் அவற்றின் முழு திறனை எட்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1824477
*******
(Release ID: 1824502)
Visitor Counter : 162