சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இறப்பு விகிதத்தை மிகைப்படுத்திக் காட்டிய உலக சுகாதார அமைப்பு

Posted On: 05 MAY 2022 6:18PM by PIB Chennai

கணித மாதிரிகளின் அடிப்படையில் உயிரிழப்புகளின் மதிப்பீட்டை மிகைப்படுத்தி காட்ட உலக சுகாதார அமைப்பு பின்பற்றும் நடைமுறைக்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுபோன்ற மாதிரிகளால் ஏற்படும் முடிவுகள், நடைமுறை மற்றும் செயல்பாடுகளுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வரும் போதிலும், இந்தியா தெரிவிக்கும் ஆட்சேபங்களுக்கு உரிய தீர்வு காணாமல், உயிரிழப்புகள் குறித்த மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீட்டை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.  இந்தியாவின் தலைமைப்பதிவாளரால் சிவில் பதிவு நடைமுறை வாயிலாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் கிடைக்கும் நிலையில், இந்தியா தொடர்பான மிகைப்படுத்தப்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கைகளுக்கு கணித மாதிரிகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் உலக சுகாதார அமைப்புக்கு இந்தியா ஏற்கனவே தெரிவித்துள்ளது.  இந்தியாவில் பிறப்பு-இறப்பு பதிவு மாபெரும் பணி என்பதோடு, பல தசாப்தங்களுக்கு முந்தைய சட்ட நடைமுறைகள், அதாவது “பிறப்பு-இறப்பு பதிவுச்சட்டம் 1969”-ன்படி, தான் நிர்வகிக்கப்படுகிறது. இந்திய  தலைமை பதிவாளரால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் மாதிரிப்பதிவு புள்ளி விவரங்கள் மற்றும் சிவில் பதிவு விவரங்களை, ஏராளமான ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உள்நாட்டையும், வெளிநாடுகளையும் சேர்ந்த விஞ்ஞானிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 இந்திய தலைமைப்பதிவாளர் அலுவலகம் நூற்றாண்டு பழமை வாய்ந்த அமைப்பு என்பதோடு, இது மாநில / யூனியன் பிரதேசங்களின் தலைமைப்பதிவாளர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள சுமார் 3 லட்சம் பதிவாளர்கள் / துணைப் பதிவாளர்களின் உதவியுடன் செயல்பட்டுவருகிறது.

நாடுகளை நிலை-1, நிலை-2 என வகைப்படுத்த உலக சுகாதார அமைப்பு பயன்படுத்தும் புள்ளி விவரங்களில் முரண்பாடுகள் இருப்பதை இந்தியா சுட்டிக்காட்டி இருப்பதோடு, தவறான கணித மாதிரிகளின் மதிப்பீட்டை பயன்படுத்தி இந்தியாவை இரண்டாம் நிலை நாடு என சித்தரித்திருப்பதை எதிர்த்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

 இந்திய தலைமைப்பதிவாளர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள், உலக சுகாதார அமைப்புடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட போதிலும், அந்த அமைப்பு அரசால் அனுப்பப்பட்ட புள்ளி விவரங்களை தங்களுக்கு சாதகமாக புறக்கணித்து விட்டு, இந்தியாவால் தொடர்ந்து ஆட்சேபிக்கப்படும் ஒரு நடைமுறை மற்றும் ஆதாரங்களைக் கொண்டு மிகைப்படுத்தப்பட்ட உயிரிழப்பு மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1823012

***************


(Release ID: 1823345) Visitor Counter : 298


Read this release in: English , Gujarati , Urdu , Hindi