உள்துறை அமைச்சகம்
இந்தியா – பங்களாதேஷ் எல்லைப்புற கண்காணிப்பிற்காக படகு காவல் நிலையத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா தொடங்கி வைத்தார்
Posted On:
05 MAY 2022 5:13PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் திரு. அமித்ஷா தனது மேற்கு வங்க பயணத்தின் முதல் நாளில், இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையே சுந்தரவனக் காடு பகுதிகளில் கண்காணிப்பை அதிகப்படுத்தும் வகையில் நர்மதா, சட்லெஜ் மற்றும் காவிரி ஆகிய மிதவை புறக்காவல் நிலையங்களை (ரோந்து படகுகள்) தொடங்கி வைத்தார். மேலும், படகு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தும், மைத்ரி சங்கராலயத்திற்கு அடிக்கல்லும் நாட்டினார். இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் திரு. நிசித் பிரமானிக், சாந்தனு தாக்கூர் மற்றும் எல்லை பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் ஆகியோர் பங்கேற்றனர்.
ராஜஸ்தானின் பாலைவனமாக இருந்தாலும், கட்ச் உப்பு நிலமாக இருந்தாலும், சுந்தர வன காடுகளின் முதலைகள் அச்சுறுத்தல் இருந்தாலும் தேசப் பாதுகாப்பே முக்கியம் என வீரர்கள் நாட்டை பாதுகாப்பதாகவும், மத்திய ஆயுதப்படைகளுடன் இருக்கும் போது தனக்குள் புதிய சக்தி பிறப்பதாக உணர்கிறேன் எனவும் திரு. அமித்ஷா பேசினார்.
பிரதமரின் சீரிய தலைமையில் நாடு இன்று அனைத்து துறைகளிலும் முன்னேறி வருவதற்கு காரணம், நமது எல்லை பகுதிகள் பாதுகாப்பாக இருப்பதே ஆகும் எனவும், நமது நாட்டின் எப்பகுதிக்கு சென்றாலும் நம்மால் நிம்மதியாக உறங்க முடிகிறது, இதற்கு காரணம் நமது வீரர்கள் எல்லையில் 24 மணி நேரமும் நாட்டை பாதுகாப்பதே காரணம் என பெருமையாக கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டு மக்கள் சார்பாக நமது வீரர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறிய அவர், நமது எல்லைப் பாதுகாப்பு படையின் வீரம் மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக ஒரு மகாவீர் சக்ரா, 4 கீர்த்தி சக்ரா, 13 வீர் சக்ரா மற்றும் 13 சௌரிய சக்ரா விருதுகளை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
இன்று தொடங்கி வைக்கப்பட்ட ரோந்து படகுகள், பிரதமரின் தற்சார்பு இந்தியா தொலைநோக்கின் படி, கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ரூ. 38 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த படகு அதி நவீன தொழில் நுட்பங்களுடன், வீரர்களுக்கு குண்டு துளைக்காத ஆடைகளும், வீரர்களுக்கு தேவையான உணவு வழங்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன் என்று அவர் கூறினார்.
மேலும், நட்புறவு அருங்காட்சியகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும், கடந்த 1970இல் அண்டை நாடுகள் இந்தியா மீது போர் தொடுத்தபோது, எல்லைப் பாதுகாப்பு படை ராணுவத்துடன் இணைந்து அந்த பகுதியில் மனித உரிமைகளை காத்தது என்றார். மேலும், எல்லை பாதுகாப்பு படையினரின் சிரமங்களை குறைக்க வேண்டும் என்பதே பிரதமரின் முயற்சி எனவும் இதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
எல்லை பாதுகாப்பு படையில் பெண்களும் இணைந்து தேச பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும், பணியிடங்களில் பெண்களுக்கான தனி ஓய்வறை அமைக்க இந்திய அரசு ஐந்தாண்டு திட்டத்தை கொண்டு வர உள்ளதாக கூறிய அவர், வீரர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தேவையான வசதிகளை நிச்சயம் நிறைவேற்றுமென தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1822971
***************
(Release ID: 1823044)