தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்தியாவின் செழுமையான சினிமா பாரம்பரியத்தை பாதுகாக்க பிரதமரின் தொலைநோக்கு பார்வையுடன் இணைந்து உலகின் மிகப்பெரிய திரைப்பட மறுசீரமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது: மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர்
Posted On:
05 MAY 2022 6:12PM by PIB Chennai
இந்தியாவின் செழுமையான, கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்காகும் என்று கூறியுள்ள மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், திரைப்படங்கள் இந்த பாரம்பரியத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்துள்ளார்.
புனேயில் இந்திய தேசிய திரைப்பட கருவூலத்திற்கு பயணம் மேற்கொண்ட அவர், நமது சினிமா பாரம்பரியத்தை டிஜிட்டல் மயமாக்கி பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு தேசிய திரைப்பட பாரம்பரிய இயக்கம் 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது என்று கூறினார். இந்த இயக்கத்திற்கு மொத்தம் ரூ.597 கோடி மதிப்பீட்டில் ரூ.363 கோடி பாதுகாப்பு நோக்கத்திற்காக மட்டும் பயன்படுத்தப்படும் என்றும் கூறினார். உலகின் மிகப்பெரிய திரைப்பட மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் இது மேற்கொள்ளப்படும் என்று கூறிய அமைச்சர், இதற்கான முடிவு நேற்று எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
திரைப்படங்கள் நமது கலாச்சாரத்தின் பகுதியாக உள்ளன என்று கூறிய அவர், கடந்த 100 ஆண்டுகளாக திரைப்படத் தொழில் இந்தியாவை இத்துறையில் உலகிலேயே மிகப்பெரிய நாடாக மாற்றியுள்ளது என்று தெரிவித்தார்.
5900க்கும் மேற்பட்ட குறும்படங்கள், ஆவணப்படங்கள், கதைப்படங்களை பாதுகாக்கும் நடைமுறை நடந்து வருவதாக கூறிய அவர், உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கையாக இது இருக்கும் என்று தெரிவித்தார்.
முன்னதாக புனேயில் உள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் (எப்டிஐஐ) செயல்படும் விதம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்திய அமைச்சர், இந்த நிறுவனத்தை சர்வதேச தரத்திற்கு எடுத்துச்செல்லும் தொலைநோக்கு குறித்து விளக்கினார். சர்வதேச திரைப்பட நிறுவனங்களுடன் சேர்ந்து மாணவர்கள் தங்களது கதை சொல்லும் திறனை உயர்த்த முடியும் என்று அவர் கூறினார்.
எப்டிஐஐ இந்தியாவின் மிகப் பெருமைமிக்க நிறுவனம் என்று கூறிய அவர், ஆய்வுக் கூட்டத்தில் விரிவான விவாதம் நடைபெற்றதாக தெரிவித்தார். அனிமேஷன், விஷூவல் எபெக்ட், கேமிங், காமிக்ஸ் ஆகிய துறைகளில் எவ்வாறு கவனம் செலுத்துவது என்பது பற்றி விவாதிக்கப்பட்டதாகவும், இதன் மூலம் நமது மாணவர்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு வேலை தேடுபவர்களாக இல்லாமல், தொழில்முனைவோர்களாக மாற முடியும் என அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1823013
***************
(Release ID: 1823041)
Visitor Counter : 194