குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
முகமறியா சுதந்திர போராட்ட வீரர்கள் தியாகம் குறித்து நமது இளைய சமுதாயம் அறியச் செய்வதன் மூலமாக அவர்களை ஊக்குவிக்க இயலும் –குடியரசு துணைத் தலைவர்
प्रविष्टि तिथि:
04 MAY 2022 6:37PM by PIB Chennai
நமது வரலாற்று புத்தகங்களில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட பல்வேறு தலைவர்கள் தங்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய கௌரவத்தையும் மரியாதையையும் பெறவில்லை என்று குடியரசு துணைத் தலைவர் திரு வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார். குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் இன்று (04.05.2022) சுதந்திர போராட்ட வீரரும் அரசியல் தலைவருமான ஹேம்வதி நந்தன் பகுகுணா வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய குடியரசு துணைத் தலைவர் இத்தகைய தியாகங்களை புரிந்த பெருமதிப்பிற்குரிய கனவான்கள் மற்றும் பெண்மணிகள் ஆகியோரது வரலாற்றை பொது மக்கள் அறியும் வகையிலும், புதிய தலைமுறையினர் இந்த தேசத்தைக் கட்டமைக்கும் பணியில் ஈடுபடுமு் போது உணர்ந்திருக்கும் வகையிலும் தெரிவிக்க வேண்டும் என்றார்.
ஹேம்வதி நந்தன் பகுகுணா - அரசியல் செயற்பாட்டாளர் என்ற இந்த புத்தகம், ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை பேராசிரியர் ரீடா பகுகுணா ஜோஷி மற்றும் டாக்டர் ராம்நரேஷ் திரிபாதி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.
ஹேம்வதி நந்தன் பகுகுணா கொள்கை பிடிப்புடன்கூடிய ஒரு அரசியல் தலைவராகவும் நெறி சார்ந்த நிர்வாகியாகவும் திகழ்ந்தவர் என்று கூறிய குடியரசு துணைத் தலைவர் திரு வெங்கய்யா நாயுடு, தமது வாழ்க்கை முழுவதையும் தேசத்தின் சேவைக்காக அர்பணித்தவர் என்றும் புகழாரம் சூட்டினார். காந்திய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவராக திகழ்ந்த பகுகுணா, கொள்கைகளுக்காக வாழ்ந்தவரென்றும், நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர் என்றும் அவர் கூறினார். மாணவப் பருவத்திலேயே கருணை உள்ளமும் அக்கறை நிறைந்தவருமாக திகழ்ந்த பகுகுணா பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளின் நிலைமை குறித்து கவலை கொண்டவராக இருந்ததோடு மட்டுமின்றி பல வழிகளில் அவர்களுக்கு உதவவும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் குடியரசுத் துணை தலைவர் எடுத்துரைத்தார். உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக அவர் இருந்தபோது ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு நிலப் பகிர்மானம் செய்த முதல் மாநிலமாக உத்திரப்பிரதேசம் விளங்கியது என்றார். இந்த செயலால் கவரப்பட்ட அப்போதைய முதுபெரும் தலைவர் வினோபா பாவே, மண்ணின் மைந்தன் என்று பொருள்படும் வகையில் மிட்டி நந்தன் என்ற பட்டப்பெயரை அவருக்கு சூட்டினார் என்று குடியரசு துணைத்தலைவர் பாராட்டு தெரிவித்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக போராடிய பகுகுணா, அவ்வப்போது இளைஞர்களை ஒன்று திரட்டி கிராமங்களில் தூய்மைப்பணிகளை மேற்கொண்டதும், பெண்கள் வெகுதூரத்திலிருந்து குடிநீர் எடுத்துவரும் பணியில் உதவி புரிந்திருப்பதாக தெரிவித்த குடியரசு துணைத் தலைவர், தற்போதைய அரசு தூய்மை இந்தியா திட்டத்தின் மூலமாக இத்தகைய பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து நிறைவேற்றி வருவதாக குறிப்பிட்டார். இத்தகைய திட்டங்களில் பொது மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தேசத்தை தூய்மையாகவும், சுத்தமாகவும், பசுமையாகவும் வைத்திருக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த சுயசரிதை புத்தகம், நாட்டின் இளைய சமுதாயத்தினரிடையே ஊக்கமளிக்கும் தகவல்களை அளிப்பதாக அமையும் என்று தாம் நம்புவதாக குடியரசுத் துணைத்தலைவர் குறிப்பிட்டார். மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1822696
******
(रिलीज़ आईडी: 1822753)
आगंतुक पटल : 242