நிதி அமைச்சகம்

கண்ட்லா ஹெராயின் வழக்கில், இறக்குமதியாளர் கைது

Posted On: 25 APR 2022 9:28AM by PIB Chennai

குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு (ஏடிஎஸ்) அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றியதில் கிடைத்த உளவுத் தகவல்களின் அடிப்படையில், உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நிறுவனத்தால் கண்ட்லா துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சரக்கை, வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (டிஆர்ஐ) அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஈரானின் பாந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து இந்த சரக்கு, கண்ட்லா துறைமுகத்தை வந்தடைந்தது. 17 கொள்கலன்களில் (10,318 பைகள்) இறக்குமதி செய்யப்பட்ட இந்த சரக்கின் மொத்த எடை 394 மெட்ரிக் டன் என்றும் அது "ஜிப்சம் பவுடர்" என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுவரையிலான சோதனையில், ரூ. 1439 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள 205.6 கிலோ ஹெராயின் மீட்கப்பட்டுள்ளது. சரக்குகளின் விரிவான ஆய்வு துறைமுகத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உத்தராகண்டில், பதிவு செய்யப்பட்ட முகவரியில் நடத்திய விசாரணையின் போது இறக்குமதியாளர் கண்டுபிடிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து, இறக்குமதியாளரைப் பிடிக்க நாடு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இறக்குமதியாளர், அவரது இருப்பிடங்களை மாற்றிக்கொண்டிருந்த போதிலும், அவரைக் கண்டுபிடிக்க டிஆர்ஐ இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, தனது விடாப்பிடியான மற்றும் தீவிர முயற்சிகளால், பஞ்சாபில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் அவரை கைது செய்தது.

தேசிய போதைப்பொருள் தடுப்பு சட்டம், 1985-ன் கீழ் அவரை கைது செய்த டிஆர்ஐ, 24.04.2022 அன்று அமிர்தசரஸ் சிறப்பு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தியது. புஜ்-ல் உள்ள நீதிமன்றத்தின் முன் அவரை ஆஜர்படுத்துவதற்கான அனுமதியை அமிர்தசரஸ் நீதிமன்றம் வழங்கியது. இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819680

***************



(Release ID: 1819795) Visitor Counter : 139