பாதுகாப்பு அமைச்சகம்

அசாமில் 1971 போர்வீரர்களைப் பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார்; முன்னாள் ராணுவத்தினர் தேசத்தின் முக்கியமான சொத்துக்கள் என்று அவர் குறிப்பிட்டார்

Posted On: 23 APR 2022 4:51PM by PIB Chennai

அசாமின் குவஹாத்தியில் 2022 ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 1971ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் போது பங்கேற்ற ராணுவ வீரர்களைப் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத்சிங் பாராட்டினார். 300க்கும் அதிகமான ராணுவ வீரர்கள், போரில் உயிர் நீத்த வீரர்களின் மனைவியர், அவர்களின் குடும்பத்தினர் இந்தப் பாராட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 1971ஆம் ஆண்டுப் போரின் வெற்றியை உறுதிப்படுத்த எதிரிகளோடு போராடும் துணிச்சல் மிக்க மன உறுதியையும், வீரத்தையும், அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் பாராட்டுவதற்காக அசாம் அரசு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. 1971ஆம் ஆண்டுப் போரின்போது பங்களாதேஷின் ராணுவ வீரராக இருந்த, பத்மஸ்ரீ விருது பெற்ற லெப்டினன்ட் கர்னல் (ஓய்வு) க்வாசி சஜ்ஜத் அலி ஜாஹிரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 1965 ஆம் ஆண்டுப் போரில் பங்கேற்ற சில வீரர்களும் இதில் பங்கேற்றனர்.

போர் வீரர்களையும் உயிரிழந்த வீரர்களின் மனைவியரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதாக திரு ராஜ்நாத்சிங் தமது உரையில் குறிப்பிட்டார். தேசத்தின் சேவைக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு அவர் புகழஞ்சலி செலுத்தினார். ஒவ்வொரு இந்தியருக்கும் உந்துசக்தியாக இருக்கும் தேசத்தின் முக்கிய சொத்துக்கள் ராணுவ வீரர்கள் என்று அவர் குறிப்பிட்டார். தற்போது சேவையில் இருக்கும் வீரர் இந்தியாவின் பலம் என்றும் ராணுவத்தில் ஏற்கனவே பணியாற்றியவர்கள் அந்த பலத்தோடு நீடித்த ஊக்கத்தை அளிப்பவர்கள் என்றும் அவர் கூறினார்.

வடகிழக்குப் பகுதிகள் பலவற்றில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கப்பட்டதற்குக் காரணம் அந்தப் பகுதியில் நீடித்த அமைதியும் நிலைத்தன்மையும் ஏற்பட்டதுதான் என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

முன்னாள் ராணுவ வீரர்களின் நல்வாழ்வையும் திருப்தியையும் உறுதிப்படுத்துவது அரசின் கடமை என்பதை வலியுறுத்திய திரு ராஜ்நாத் சிங், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவியும் செய்யப்படும் என்று உறுதி அளித்தார். முன்னாள் ராணுவ வீரர்களின் நலனை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டிருப்பதாக அவர் கூறினார். தற்போது ராணுவத்தில் உள்ள ஒவ்வொரு வீரரும் நாளை மதிக்கத்தக்க முன்னாள் வீரர்களாக இருப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

'1971ன் துணிச்சல் மிக்க வீரர்கள்' என்ற புத்தகத்தையும் இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டார். அசாம் ஆளுநர் பேராசிரியர் ஜெகதீஷ் முக்கி, முதலமைச்சர் டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோரும் இந்தப் பாராட்டு விழாவில் கலந்து கொண்டனர்.
 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செயதிக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819319

************


 



(Release ID: 1819370) Visitor Counter : 137