தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலகில் இந்தியாவுக்கு என ஒரு அடையாளத்தை சினிமா உருவாக்கியுள்ளது; தகவல் ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர்

प्रविष्टि तिथि: 21 APR 2022 3:17PM by PIB Chennai

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் இன்று மும்பை பெட்டர் சாலையில் உள்ள திரைப்படப்பிரிவு வளாகத்தில் அமைந்துள்ள இந்திய திரைப்பட தேசிய அருங்காட்சியகத்திற்கு சென்று பார்வையிட்டார்.

இந்த அருங்காட்சியகம், குல்ஷன் மஹால் பாரம்பரிய கட்டடத்திலும், புதிய அருங்காட்சியக கட்டடத்திலும் அமைந்துள்ளது. அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட அமைச்சர், திரைப்படங்கள் மீது குறிப்பாக இந்திய திரைப்படங்கள் மீது ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடமாக தேசிய அருங்காட்சியகம் உள்ளது என்று கூறினார். நீங்கள் மும்பையில் அருங்காட்சியகத்துக்கு செல்லாவிட்டால், உங்களது மும்பை பயணம் முழுமையடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியத் திரைப்படத்துறை மற்றும் அதன் பரிணாம வளர்ச்சி குறித்த வரலாற்றைத் தெரிந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள திரைப்பட ஆர்வலர்கள், திரைப்படத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள் இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட வேண்டும் என்று திரு தாக்கூர் ஊக்கப்படுத்தினார். “தேசிய திரைப்பட அருங்காட்சியகத்தில் சிறிது நேரத்தை செலவழியுங்கள், அருங்காட்சியகம் உங்களை, எந்தவித நவீன தொழில்நுட்பமும், கருவிகளும், இல்லாமல் திரைப்படங்களை உருவாக்கிய நூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திற்கு கொண்டு செல்லும்” என்று அவர் தெரிவித்தார். “ இன்று நாம் அனிமேஷன், விஷூவல் எஃபெக்ட்ஸ், கிராஃபிக்ஸ், கேமிங்,  தொழில்நுட்பம் பற்றியெல்லாம் பேசுகிறோம். ஆனால் இவையெல்லாம் இல்லாமலேயே அந்தக் காலத்தில் எவ்வாறு திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன என்பதையும்   மேலும், இதுவரை என்னென்ன முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையும் இங்கு நம்மால் அறிந்து கொள்ளமுடியும்” என்று அவர் தெரிவித்தார். திரைப்படங்களை படம் பிடிக்க மிகப் பெரிய கேமராக்களை மலைப்பகுதிகளில் எடுத்துச் சென்று, இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும், பட்ட சிரமங்களை அமைச்சர் சுட்டிக்காட்டினார். தொழில்நுட்பம் எவ்வாறு மனித வாழ்க்கையையும், திரைப்படத் தயாரிப்பையும் எளிதாக்கியுள்ளது என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடியும் என்று அமைச்சர் கூறினார்.

குல்ஷன் மஹால், மவுனப்பட காலம் முதல் புதிய அலை காலம் வரையிலான இந்திய திரைப்பட வரலாற்றை பிரதிபலிக்கும் 8 அரங்குகளைக் கொண்டுள்ளது. புதிய கட்டடத்தில் அதிகமாக ஊடாடும் காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

திரைப்படத்துக்கான பொருட்கள். பழங்காலக் கருவிகள், சுவரொட்டிகள், முக்கியமான திரைப்படங்களின் நகல்கள், கையேடுகள், பழைய திரைப்பட இதழ்கள் உள்ளிட்டவை இந்திய திரைப்பட வரலாற்றை சித்தரிக்கும் வகையில், காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. திரைப்படப் பிரிவின் தலைமை இயக்குநர் ரவீந்திர பாக்கர், அருங்காட்சியகம் குறித்து விளக்கினார்.

திரைப்படம் இந்தியாவின் மிகப் பெரிய மென்மையான சக்தி

திரைப்படத்துறையின் பங்கு பற்றி உரையாற்றிய அமைச்சர், “இந்திய திரைப்படங்கள், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் ஆட்சி செய்கின்றன, நமது நாட்டின் மென்மையான சக்தியாகவும் திகழ்கிறது” என்று கூறினார். கேளிக்கை மூலம் இந்திய திரைப்படங்கள், உலகின்  இந்தியாவுக்கான அடையாளத்தை உருவாக்குவதில் வெற்றி அடைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், உலகில் மிக அதிக எண்ணிக்கையில் திரைப்படங்கள், தயாரிக்கப்படுவது இந்தியாவில் தான் என்றார்.

அருங்காட்சியக வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்ட அமைச்சர் திரைப்பட பிரிவு, அரு ங்காட்சியகம், திரைப்பட சான்றிதழுக்கான மத்திய வாரியம், என்எஃப்டிசி அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார். மே மாதம் இந்த அருங்காட்சியகத்தின் நவீன அரங்கங்களில், ஆவணப்படம், குறும்படங்கள் மற்றும் அனிமேஷன் படங்களுக்கான 17-வது மும்பை சர்வதேச திரைப்படத்திருவிழா நடைபெற உள்ளது. முன்னதாக அமைச்சர், டைம்ஸ் குழுமத்தின் இந்திய பொருளாதார மாநாட்டைத் தொடங்கிவைத்து முக்கிய உரை நிகழ்த்தினார்.

***************


(रिलीज़ आईडी: 1818782) आगंतुक पटल : 201
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Kannada