குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூ பிறந்த இடத்தை குடியரசுத் துணைத் தலைவர் பார்வையிட்டார்
Posted On:
19 APR 2022 12:40PM by PIB Chennai
ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் அருகே பண்டரங்கி கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரரும் புரட்சியாளருமான திரு அல்லூரி சீதாராம ராஜூவின் பிறந்த இடத்திற்கு குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று சென்றார்.
இது தமது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என்று கூறிய திரு நாயுடு, தமது மாணவப் பருவத்தில் இருந்தே திரு அல்லூரியை தீவிரமாகப் பின்பற்றியதாக கூறினார். திரு அல்லூரியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர், சுதந்திரப் போராட்டத் தியாகியின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்ததோடு, கிராமவாசிகளுடனும் கலந்துரையாடினார்.
திரு அல்லூரியின் துணிச்சலான தியாகங்களைப் பாராட்டிய திரு நாயுடு, “பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் வலிமையை எதிர்கொள்வதற்கு அவர் சளைக்கவில்லை. ஆங்கிலேயர்களின் அநீதிகளுக்கு எதிராகப் போராட பழங்குடியினரை ஊக்கப்படுத்திய அவரது நம்பிக்கை, தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் நேர்மை ஆகியவை அசைக்க முடியாதவை,” என்றார்.
பின்னர் முகநூலில் இது குறித்து எழுதிய திரு நாயுடு, விடுதலையின் அமிர்தப் பெருவிழாவை இந்தியா கொண்டாடும் போது, நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் எண்ணற்ற தியாகங்களை நாம் நினைவுகூர்வதோடு, அவர்களின் தேசபக்தியிலிருந்து உத்வேகம் பெற வேண்டும் என்று குறிப்பிட்டார். குறுகிய நிலத்திற்காக இந்த நாயகர்கள் போராடவில்லை, கோடிக்கணக்கான மக்களை அடக்குமுறை மற்றும் அநீதி மிகுந்த பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுவிக்கவே அவர்கள் போராடினர் என்று அவர் நினைவுபடுத்தினார்.
“நமது சுதந்திரப் போராட்ட வீரர்களிடமிருந்து தியாக உணர்வையும், அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் கற்றுக்கொள்ளுங்கள். முக்கிய விழுமியங்களில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது”, என்று இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கிய திரு நாயுடு, இதுபோன்ற சிறந்த தேசிய வீரர்கள் பிறந்த இடங்களுக்குச் சென்று அவர்களின் கதைகளை நினைவுபடுத்தி உத்வேகம் பெற இளைஞர்களை வலியுறுத்தினார்.
பின்னர் ராமாலயம் பர்லாபெட்டா கிராமத்திற்கு சென்ற குடியரசுத் துணைத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர்களான திரு ரூபாகுல சுப்பிரமணியம் மற்றும் திருமதி ரூபாகுல விசாலாக்ஷியின் மார்பளவு சிலைகளைத் திறந்து வைத்தார். அக்கிராமத்தில் வசிப்பவர்களுடன் உரையாடிய திரு நாயுடு, கோவில் நுழைவு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் மற்றும் உப்பு சத்தியாகிரகம் ஆகியவற்றில் தம்பதியரின் முயற்சிகளைப் பாராட்டினார்.
அவர்களின் வாழ்க்கை இன்றைய தலைமுறைக்கு ஒரு உத்வேகமாக விளங்குகிறது என்று திரு நாயுடு கூறியதுடன், இதுபோன்ற பல அதிகம் அறியப்படாத நாயகர்களின் வாழ்க்கை குறித்து எடுத்துரைக்கவும் கொண்டாடவும் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1817967
••••
(Release ID: 1817967)
(Release ID: 1818003)
Visitor Counter : 242