பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

புதுப்பிக்கப்பட்ட தேசிய கிராம சுயராஜ்ய திட்டத்தை 01.04.2022 முதல் 31.03.2026 வரை தொடர அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 13 APR 2022 3:26PM by PIB Chennai

தேசிய கிராம சுயராஜ்யம் எனும் புதுப்பிக்கப்பட்ட மத்திய நிதியுதவித் திட்டத்தை 01.04.2022 முதல் 31.03.2026 வரை (பதினைந்தாவது நிதி ஆணையக் காலத்தில்) தொடர்வதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் நிர்வாக திறன்களை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நிதி தாக்கங்கள்:

இத்திட்டத்தின் மொத்த நிதிச் செலவு ரூ.5911 கோடி, இதில் மத்தியப் பங்கு ரூ.3700 கோடி மற்றும் மாநிலப் பங்கு ரூ.2211 கோடி.

வேலைவாய்ப்பு உருவாக்கம் உட்பட முக்கிய தாக்கம்:

நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய அமைப்புகள் உட்பட 2.78 லட்சத்திற்கும் அதிகமான கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான நிர்வாக திறன்களை மேம்படுத்துவதற்கு இத்திட்டம் உதவும்.

 

கிராமங்களில் வறுமை இல்லாத மற்றும் மேம்பட்ட வாழ்வாதாரம்,  ஆரோக்கியமான கிராமம், குழந்தைகளுக்கு நட்பான கிராமம், போதுமான தண்ணீர் வசதி கொண்ட கிராமம், சுத்தமான மற்றும் பசுமை கிராமம், கிராமத்தில் தன்னிறைவான உள்கட்டமைப்பு, சமூக பாதுகாப்பு கிராமம், நல்லாட்சியுடன் கூடிய கிராமம், மற்றும் கிராமத்தில் உருவாக்கப்படும் வளர்ச்சி உள்ளிட்ட இலக்குகளை எட்ட இது உதவும்.

 பட்டியல் பிரிவுகள், பழங்குடியினர் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை பஞ்சாயத்துகள் கொண்டிருப்பதாலும், அடித்தட்டு மக்களுக்கு நெருக்கமான அமைப்புகளாக இருப்பதாலும், பஞ்சாயத்துகளை வலுப்படுத்துவது சமூக நீதி மற்றும் சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியுடன் சமத்துவத்தையும் உள்ளடக்கிய தன்மையையும் ஊக்குவிக்கும்.

பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் மின்-ஆளுமையின் அதிகரித்த பயன்பாடு மேம்பட்ட சேவை வழங்கல் மற்றும் வெளிப்படைத்தன்மையை அடைய உதவும். கிராம சபைகளை இத்திட்டம் வலுப்படுத்தும். திட்டத்தை செயல்படுத்துவதை மேற்பார்வையிடவும், திட்டத்தின் கீழ் இலக்குகளை அடைவதற்காக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்கவும் தேவை அடிப்படையிலான ஒப்பந்தப் பணியாளர்கள் வழங்கப்படலாம்.

பயனாளிகளின் எண்ணிக்கை:

நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய அமைப்புகள் உள்ளிட்ட கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட 60 லட்சம் பிரதிநிதிகள், செயல்பாட்டாளர்கள் மற்றும் இதர பங்குதாரர்கள் இத்திட்டத்தின் நேரடிப் பயனாளிகளாக இருப்பார்கள்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816360

***************



(Release ID: 1816432) Visitor Counter : 658