குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

பருத்தி மகசூல் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், விவசாயிகளின் வருமானத்திற்கு முன்னுரிமை அளிக்கவும் குடியரசுத் துணைத்தலைவர் அழைப்பு

Posted On: 12 APR 2022 1:28PM by PIB Chennai

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் இந்தியாவில் பருத்தி விளைச்சல் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்த அனைத்து பங்குதாரர்களும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளுமாறு குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று அழைப்பு விடுத்தார்.

உலகின் மற்ற பெரிய பருத்தி உற்பத்தியாளர்களுடன் ஒப்பிடும்போது இந்திய பருத்தியின் குறைந்த விளைச்சல் குறித்து தமது கவலையை வெளிப்படுத்திய திரு நாயுடு, சிறந்த ஆராய்ச்சி மற்றும் சிறந்த நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் விவசாயிகளை வழிநடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்திய பருத்தி ஜவுளிகளின் உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிக்கவும், நமது பாரம்பரிய வலிமைகளை மூலதனமாக்கவும், நவீன வேளாண் நடைமுறைகளுக்கு மாறவும், பருத்தித் தொழிலில் உலகளாவிய தலைவராக நமது நிலையை உறுதிப்படுத்தவும் அவர் அழைப்பு விடுத்தார்.

விவசாயத்திற்கு அடுத்தபடியாக, ஜவுளித் துறையின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்ட திரு நாயுடு, பண்ணை உற்பத்தியை மேம்படுத்துதல், இயந்திரமயமாக்கல், ஜவுளித் தொழிலாளர்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொண்டு, சிறு நிறுவனங்களுக்கு வழிகாட்டி அந்தத் துறைக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்று  வலியுறுத்தினார். கூடுதல் எக்ஸ்ட்ரா ஸ்டேபிள் பருத்தி மற்றும் இயற்கை பருத்தி போன்ற சிறப்புப் பருத்திகளில் பல்வகைப்படுத்தவும் திரு நாயுடு பரிந்துரைத்தார்.

புது தில்லி விஞ்ஞான் பவனில் சிஐடிஐ-சிடிஆர்ஏ பொன்விழா கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத் தலைவர் இன்று தொடங்கி வைத்தார். இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு (சிஐடிஐ) என்பது இந்தியாவில் உள்ள ஜவுளித் துறையின் முன்னணி அமைப்பாகும். பருத்தித் துறையில் பல்வேறு விதை மேம்பாடு மற்றும் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பருத்தி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி சங்கம் (சிடிஆர்ஏ) இதன் விரிவாக்கப் பிரிவாகும்.

இந்தியப் பொருளாதாரத்தில் பருத்தியின் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், நமது நாகரிக பாரம்பரியத்தில் ஒரு பெரிய மதிப்பை பருத்தியும் கொண்டுள்ளது என்றார். ‘சுதேசி இயக்கம்’ தொடங்கி நமது சுதந்திரப் போராட்டத்தில் பருத்தி முக்கிய பங்கு வகித்ததை அவர் நினைவு கூர்ந்தார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் இணைத்ததன் மூலம், "பிரிட்டிஷ் அரசிற்கு எதிராக மக்கள் போராடுவதற்கு பருத்தி மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும்" என்று அவர் கூறினார்.

உலகின் மிகப்பெரிய பருத்தி உற்பத்தியாளராக (23%) இருந்தாலும், பருத்தி சாகுபடியில் (உலகப் பரப்பில் 39%) அதிக பரப்பளவைக் கொண்டிருந்தாலும், இந்தியாவில் ஹெக்டேருக்கான விளைச்சல் 460 கிலோ பருத்தி என குறைவாக இருப்பது குறித்து திரு நாயுடு தனது கவலையைத் தெரிவித்தார். ஒரு ஹெக்டேருக்கு உலக சராசரியான 800 கிலோ பருத்தியுடன் ஒப்பிடும் போது, இதை மேம்படுத்த நடவு அடர்த்தியை மேம்படுத்தவும், பருத்தி அறுவடையை இயந்திரமயமாக்கவும், வேளாண் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவும் அவர் அழைப்பு விடுத்தார்.

பருத்தி நூலில் இந்தியா வலுவான உலகளாவிய தடம் பெற்றிருந்தாலும், துணிகள் மற்றும் ஆடைகளில் அதன் போட்டித்தன்மையை மேம்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். திருத்தப்பட்ட - தொழில்நுட்ப மேம்பாட்டு நிதித் திட்டம் மற்றும் சமர்த் எனும் ஜவுளித் துறை திறன் மேம்பாட்டுத் திட்டம் போன்ற அரசு திட்டங்கள் இந்த இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்றார் அவர்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1815947

***************



(Release ID: 1816084) Visitor Counter : 208