கலாசாரத்துறை அமைச்சகம்

சங்கீத நாடக அகாடமி மற்றும் லலித் கலா அகாடமி ஊக்கத்தொகை மற்றும் விருதுகளை குடியரசுத் துணைத் தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு வழங்கினார்

Posted On: 09 APR 2022 5:47PM by PIB Chennai

இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் மற்றும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, குழந்தைகள் தங்கள் விருப்பப்படி எந்த கலை வடிவத்தையும் கற்றுக் கொள்ள ஊக்குவிக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு பள்ளிகள் மற்றும் பெற்றோர்களுக்கு இன்று அழைப்பு விடுத்தார். மீண்டும் நமது வேர்களுக்குச் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், இந்திய சமூகத்தில் கலாச்சார மறுமலர்ச்சிக்கு அறைகூவல் விடுத்தார்.

மேற்கத்திய கலாச்சாரத்தின் மீதான மோகத்தால் பொம்மலாட்டம் போன்ற நமது வளமான பாரம்பரிய நாட்டுப்புற கலை வடிவங்கள் மறைந்து வருவதாக அவர் கூறினார். அரசுகள் மட்டுமன்றி ஒட்டுமொத்த சமூகத்தின் தீவிர ஈடுபாட்டுடன் அவை புத்துயிர் பெற வேண்டும். சிறுவயதிலேயே படைப்பாற்றல் மற்றும் கலையறைவை குழந்தைகள் பெறுவது தங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், மேலும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழவும் உதவும் என்பதைக் குறிப்பிட்ட திரு நாயுடு, கல்வி நிறுவனங்கள் தங்கள் பாடத்திட்டத்தில் கலைப் பாடங்களுக்கு சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

சங்கீத நாடக அகாடமி மற்றும் லலித் கலா அகாடமி ஊக்கத்தொகை மற்றும் விருதுகளை குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு இன்று வழங்கினார். நாடகக் கலை மற்றும் நுண்கலைத் துறையில் பங்காற்றிய பல்வேறு கலைஞர்களுக்கு அவர் விருதுகளை வழங்கினார்.

'விடுதலையின் அமிர்தப் பெருவிழா' கொண்டாட்டங்களைப் பற்றி குறிப்பிடுகையில், அதிகம் அறியப்படாத நாயகர்கள் பலர் நமது சுதந்திரத்திற்காக தியாகங்களைச் செய்தார்கள், ஆனால் அவர்கள் மீது நமது வரலாற்று புத்தகங்களில் போதுமான கவனம் செலுத்தப்படாததால், அவர்களின் கதைகள் பெரும்பாலும் மக்களுக்குத் தெரியவில்லை என்று திரு நாயுடு கூறினார். இந்த சிதைவுகளை சரிசெய்து, சுதந்திரப் போராட்டத்தின் போது அதிகம் அறியப்படாத இந்த மாவீரர்களின் பங்களிப்புகளை முன்னிலைப்படுத்த அவர் அழைப்பு விடுத்தார்.

சுதந்திரப் போராட்டத்தின் போது தேசபக்தி உணர்வுகளைத் தூண்டுவதில் காட்சி மற்றும் நிகழ்த்துக் கலைகளின் பங்கை நினைவுகூர்ந்த குடியரசுத் துணைத் தலைவர், ஆங்கிலேயர்களின் அடக்குமுறையின் கதைகளை திறம்படச் சொல்வதற்கு கலை "சக்திவாய்ந்த அரசியல் ஆயுதமாக" பயன்படுத்தப்பட்டது என்றார். ரவீந்திரநாத் தாகூர், சுப்ரமணிய பாரதி, காசி நஸ்ருல் இஸ்லாம் மற்றும் பங்கிம் சந்திர சட்டர்ஜி ஆகியோரின் தேசபக்தி மிளிரும் பாடல்களும் கவிதைகளும் மக்களிடையே தேசியவாதத்தின் வலுவான உணர்வுகளை எவ்வாறு தூண்டியது என்பதை அவர் நினைவு கூர்ந்தார். "சக்திவாய்ந்த கலை வெளிப்பாட்டின் மூலம் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பு நமது சுதந்திரப் போராட்டத்திற்கு இன்றியமையாதது, அதை மறந்துவிடக் கூடாது" என்று அவர் வலியுறுத்தினார்.

"நமது செழுமையான கடந்த காலத்தை நிகழ்காலத்தோடும் எதிர்காலத்தோடும் இணைக்கும் தொடர்ச்சியின் இழையை வலுப்படுத்துவதில்" கலைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டிய திரு நாயுடு, நமது மகத்தான கலாச்சார மரபுகள் மற்றும் பல்வேறு கலை வடிவங்களைப் பாதுகாத்து மேம்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்று கூறினார். தேசத்தின் அருவமான கலாச்சார பாரம்பரியத்துடன் பின்னிப் பிணைந்து நமது தேசிய அடையாளத்தை வடிவமைக்கும் காட்சி மற்றும் நிகழ்த்து கலைகளைப் பாதுகாக்க அவர் அழைப்பு விடுத்தார்.

மத்திய சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, சங்கீத நாடக அகாடமி மற்றும் லலித் கலா அகாடமியின் தலைவர், திருமதி உமா நந்தூரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1815239

**********



(Release ID: 1815248) Visitor Counter : 203