விவசாயத்துறை அமைச்சகம்
வேளாண் விரிவாக்க நிர்வாகத்திற்கான தேசிய கல்விக் கழகத்தின் விரிவடைந்த பயிற்சித் திட்டத்தை மத்திய வேளாண் அமைச்சர் தொடங்கிவைத்தார்
Posted On:
05 APR 2022 5:34PM by PIB Chennai
வேளாண் விரிவாக்க நிர்வாகத்திற்கான தேசிய கல்விக் கழகத்தால் (மேனேஜ்) ஏற்பாடு செய்யப்பட்ட இயற்கை வேளாண்மை குறித்த முதன்மை பயிற்சியாளர்களுக்கான இணையவழி பயிற்சித் திட்டத்தை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் இன்று தொடங்கிவைத்தார். சுதந்திரத்தின் 75வது ஆண்டுப் பெருவிழாவின் ஒரு பகுதியாக நாட்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 30,000 கிராமத்தலைவர்களுக்கு 750 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும் பணி மேனேஜ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கூறினார்.
இயற்கை வேளாண்மையை மேம்படுத்த 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் இயற்கை வேளாண்மை குறித்த பாட வகுப்புகளை சேர்ப்பதற்கு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
வேளாண்மையுடன் நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்க அரசு முயற்சி மேற்கொண்டிருப்பதாகவும் இதற்கு மாநிலங்களின் ஒத்துழைப்பு தேவை என்றும் அவர் குறிப்பிட்டார். ரூ.6865 கோடி செலவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் புதிய வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் மொத்தம் 10,000 அமைப்புகள் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இவற்றின் மூலம் விவசாயிகளின் வேளாண்மை குறித்த அறிவு மேம்படுத்தப்படும் என்றும் இதனால் புதிய தொழில்நுட்பங்களை அவர்களால் பயன்படுத்த இயலும் என்றும் திரு தோமர் கூறினார்.
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர்கள் திரு கைலாஷ் சவுத்ரி, திருமதி ஷோபா கரண்ட்லாஜே உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813772
------
(Release ID: 1813824)