புவி அறிவியல் அமைச்சகம்
சுமார் 33.6% கடற்கரை பகுதிகள் பல்வேறு அளவிலான அரிப்புக்கு உட்பட்டுள்ளன; தமிழகம், புதுச்சேரியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
Posted On:
31 MAR 2022 3:19PM by PIB Chennai
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
1990 முதல் 2018 வரை மொத்தம் 6,632 கிமீ நீளமுள்ள இந்தியக் கடற்கரைப் பகுதி பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. சுமார் 33.6% கடற்கரையோர பகுதிகள் பல்வேறு அளவிலான அரிப்புக்கு உட்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரிமோட் சென்சிங் தரவு மற்றும் ஜிஐஎஸ் மேப்பிங் நுட்பங்களைப் பயன்படுத்தி 1990-ம் ஆண்டு முதல் கரையோர அரிப்பை கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் கண்காணித்து வருகிறது.
சூறாவளிகள் அதிகரிப்பு, கடல் மட்ட உயர்வு, துறைமுகங்கள் கட்டுதல், கடற்கரை சுரங்கப் பணி மற்றும் அணைகள் கட்டுதல் போன்றவை கடலோர அரிப்புக்கான காரணங்களில் அடங்கும்.
66 மாவட்ட வரைபடங்கள், 10 மாநில/யூனியன் பிரதேச வரைபடங்களுடன் 1:25000 அளவில் கடலோர அரிப்பினால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை அடையாளம் காண இந்திய கடற்கரை முழுவதும் பற்றி 526 வரைபடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. “இந்தியக் கடற்கரையோர மாற்றங்களின் தேசிய மதிப்பீடு” பற்றிய அறிக்கை ஜூலை 2018-ல் வெளியிடப்பட்டதோடு கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்காக பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. அனைத்து வரைபடங்களின் டிஜிட்டல் மற்றும் நேரடி நகல் மார்ச் 25, 2022 அன்று வெளியிடப்பட்டது.
புதுமையான கடலோர அரிப்புத் தணிப்பு நடவடிக்கைகளை இரண்டு இடங்களில் புவி அறிவியல் அமைச்சகம் வெற்றிகரமாக நிரூபித்துள்ளது.
(i) புதுச்சேரி கடற்கரை மறுசீரமைப்பு திட்டம், புதுச்சேரி
நீர்மூழ்கி ரீஃப் புவி அறிவியல் அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டதோடு, கடற்கரை புத்தாக்கம் புதுச்சேரி அரசால் செயல்படுத்தப்பட்டது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1.5 கிமீ நீளமுள்ள நகரக் கடற்கரையை மீட்டெடுக்க இது உதவியது. மேலும், தீவிர சூறாவளி நிகழ்வுகளின் போது கடற்கரையைப் பாதுகாப்பதோடு கூடுதலாக சுற்றுலா மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளை மேம்படுத்த உதவியது.
(ii) கடலுார் பெரிய குப்பம், தமிழ்நாடு
நீர்மூழ்கி டைக் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தீவிர சூறாவளி நிகழ்வுகளின் போது மூன்று மீன்பிடி கிராமங்களை பாதுகாக்க இது உதவியது. மேலும், மீன்பிடி படகுகள் மற்றும் பிற மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் பாதிக்கப்பட்ட கடற்கரையை மீட்டெடுக்க உதவியது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1811914
*********************
(Release ID: 1812068)