விண்வெளித்துறை

கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாட்டு செயற்கை கோள்களை ஏவியதில் விண்வெளித்துறை சுமார் 35 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 10 மில்லியன் யூரோ வருவாய் ஈட்டியது: மத்திய அமைச்சர் தகவல்

Posted On: 30 MAR 2022 5:18PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

விண்வெளித்துறையின் பொதுத்துறை நிறுவனமான நியூஸ்பேஸ் இந்திய நிறுவனம்(என்எஸ்ஐஎல்) கடந்த 3 ஆண்டுகளில் பல தனியார் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் செயற்கை கோள்களை விண்ணில் ஏவியதன் மூலம் சுமார் 35 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 10 மில்லியன் யூரோ வருவாய் ஈட்டியது.

என்எஸ்ஐஎல் நிறுவனம் ஏற்கனவே, 45 சர்வதேச செயற்கை கோள்களை, இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவியுள்ளது. வெளிநாட்டு செயற்கைகோள் வாடிக்கையாளர்களுக்காக, 4 பிரத்தியேக விண்ணில் ஏவும் சேவை ஒப்பந்தங்களையும் பெற்றுள்ளது. 

உலகளவில் அதிகரித்து வரும் பிராட்பாண்ட் தகவல் தொடர்பு சேவைகள் காரணமாக, என்எஸ்ஐஎல் நிறுவனம் பல வெளிநாட்டு செயற்கை கோள்களை இஸ்ரோ ராக்கெட்டுகள் மூலம் அனுப்புகிறது.

விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்களை கொண்டு வருவதற்காக சீர்திருத்தங்களை மத்திய அரசு அறிவித்து அதற்காக இன்-ஸ்பேஸ் என்ற தனி அமைப்பையும் உருவாக்கியுள்ளது. இது விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தி ஊக்குவிக்கும். விண்வெளி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 48 விண்ணப்பங்களை இன்-ஸ்பேஸ் நிறுவனம் பெற்றது. இவை பரிசீலக்கப்பட்டு வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:

 https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1811548

*************



(Release ID: 1811654) Visitor Counter : 159


Read this release in: English , Urdu , Marathi