குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

அதிகம் அறியப்படாத இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி அதிகளவில் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவர் அழைப்பு

Posted On: 28 MAR 2022 5:21PM by PIB Chennai

அதிகம் அறியப்படாத இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி அதிகளவில் ஆராய்ச்சி  மேற்கொள்ள வேண்டும் என  குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். 

இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎச்ஆர்)  பொன்விழா ஆண்டு நிறைவுநாள் நிகழ்ச்சியில், சுதந்திர போராட்ட கண்காட்சியை தொடங்கி வைத்து  குடியரசுத் துணைத் தலைவர் பேசியதாவது:

வரலாற்று ஆசிரியர்கள் உண்மை அடிப்படையிலான ஆராய்ச்சி மூலம் இந்திய வரலாற்றை மறுமதிப்பீடு செய்ய வேண்டும். வரலாற்று ஆராய்ச்சி, தீவிர கல்வி அடிப்படையில்  இருக்க வேண்டும். இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் உதவியுடன், அறிவியல் பூர்வமான வரலாற்றை, வரலாற்று அறிஞர்கள் வலுப்படுத்த வேண்டும்.

இந்திய சுதந்திர போராட்டத்தின் அறியப்படாத வீரர்கள் பற்றி அதிக ஆராய்ச்சி தேவை. இவர்களில் பலர் பற்றி வரலாற்று புத்தகங்களில் ஒன்றை வரி குறிப்புகளே உள்ளன.

விடுதலையின் அம்ரித் மஹோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, அதிகம் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் கதைகள் எழுதப்பட்டு, அவர்களின் வேதனை, போராட்டம்  தெரிவிக்கப்பட வேண்டும். சொல்லப்படாத வரலாறு சொல்லப்பட வேண்டும்.

பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களின் ஆளுமைகள் பற்றி இன்னும் விரிவாக ஆராய வேண்டும். ஆங்கிலேயர்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த பழங்குடியினர் மற்றும் விவசாயிகள் புரட்சி பற்றியும் ஆராயப்பட வேண்டும்.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போராடிய பலர் நாட்டின் பல பகுதிகளில் உள்ளனர். அவர்கள் அனைவருமே தேசிய வீரர்கள் தான்.

சுதந்திர போராட்ட வீரர்களின் உன்னத தியாகங்கள். அவர்களின் போராட்டம் ஆகியவற்றை  நினைவு கூர்வது நமது கடமை.

சகோதரத்துவம், சகிப்புதன்மை, அமைதியான வாழ்க்கை போன்ற விழுமியங்கள், நமது நாகரீக வரலாற்றில் நிலைத்து இருக்கின்றன. சமூக நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சுதந்திர போராட்டம் நமக்கு கற்றுக் கொடுக்கிறது.

புவியியல் மாறுபாடுகள், மொழியியல், மதம் மற்றும் இன வேறுபாடுகள் இருந்தாலும்,   நாம் முதலில்  இந்தியர்கள். நமது பிராந்திய, மத, மொழி அடையாளங்கள் எல்லாம் அதற்கு பின்புதான்.

இவ்வாறு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1810561

*************


(Release ID: 1810660) Visitor Counter : 351


Read this release in: English , Urdu , Hindi , Punjabi