மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஊக்குவிப்பு
प्रविष्टि तिथि:
25 MAR 2022 12:52PM by PIB Chennai
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் சூழலியலை மேம்படுத்துவது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் இன்றியமையாத அம்சமாகும். மேலும், செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் தரம் ஆகியவற்றின் பலன்களுடன் நிதித்துறை மற்றும் பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 2017-18 நிதியாண்டில் 2071 கோடியாக இருந்து 2020-21 நிதியாண்டில் 5,554 கோடியாக பலமடங்கு வளர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் அதாவது 2021-22 நிதியாண்டில், மார்ச் 20, 2022 வரை மொத்தம் 8193 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளன. மக்களின் விருப்பமான கட்டண முறையாக பாரத் இன்டர்ஃபேஸ் ஃபார் மணி-யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (பீம்-யுபிஐ) உருவெடுத்துள்ளது. 28 பிப்ரவரி 2022 வரை ரூ. 8.27 லட்சம் கோடி மதிப்பில் 452.75 கோடி டிஜிட்டல் செலுத்துகை பரிவர்த்தனைகளை செய்து இது சாதனை படைத்துள்ளது.
நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் ரூபே கடன் அட்டைகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள பீம்-யூபிஐ பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதற்கான ஊக்கத் திட்டம் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.
வங்கிகளுக்கு வலுவான டிஜிட்டல் கட்டணச் சூழலை உருவாக்குவதற்கும், ரூபே கடன் அட்டை மற்றும் பீம்-யூபிஐ டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கும், அனைத்துத் துறைகள் மற்றும் மக்களிடையே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மேலும் வலுப்படுத்தவும் இந்தத் திட்டம் உதவுகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1809544
***************
(रिलीज़ आईडी: 1809704)
आगंतुक पटल : 307