குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

கல்வித்துறையில் இந்தியாவின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை மீட்க வேண்டும் – குடியரசு துணைத் தலைவர்

Posted On: 19 MAR 2022 2:33PM by PIB Chennai

தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையில், பழமை காலக் கற்பித்தல் முறை மற்றும் பாரம்பரியம் மூலம் கல்வித் துறையில் இந்தியாவின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை மீட்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு வெங்கய்யா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். 

ஹரித்துவாரில் இன்று தெற்காசிய அமைதி மற்றும் நல்லிணக்க அமைப்பைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், அந்நிய ஆட்சி மூலம்  இந்தியாவின் புகழ்பெற்ற  பழமையான கல்வி முறை சிதைக்கப்பட்டதாகக்  குறிப்பிட்டார்.

நீண்ட காலக் காலனி ஆதிக்கம் மூலம்  பெரும்பான்மையானவர்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், பெண்கல்வியில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், சிறிய அளவிலான உயர்வகுப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நிலையான  கல்வியை கற்றதாகக் கூறினார்.  தரமான கல்வியை அனைவருக்கும் அளிக்க வேண்டியது அவசியம் என்றும் அதன்மூலம் மட்டுமே நமது கல்வி  அனைத்தையும் உள்ளடக்கியதாகவும், ஜனநாயக முறையிலானதாகவும் இருக்க முடியும் என்று தெரிவித்தார்.

நமது கல்வி முறையை இந்தியமயமாக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திரு வெங்கய்யா நாயுடு, மனதளவில் இந்தியர்கள் தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் என்ற கருத்தை நிராகரித்தார். 

குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்றும், அதன்மூலம் மட்டும் சிறந்த கலாச்சார பாரம்பரியங்களை விளக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.  இயற்கையுடன் நேரத்தை செலவிடுமாறு இளைஞர்களுக்கு அறிவுறுத்திய அவர், இயற்கையே சிறந்த ஆசிரியர் என்று குறிப்பிட்டார்.

தாய்மொழியின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்திப் பேசிய குடியரசுத் துணைத் தலைவர், இளைஞர்கள் தங்களது தாய்மொழியைப் பின்பற்றி, மேம்பாடு அடையச் செய்யவேண்டும் என்று அறிவுறுத்தினார்.  இந்தியர்கள் தங்கள் சகாக்களுடன்  நாள்தோறும் தாய்மொழியில் பேசுவதையும், நிர்வாகம் தாய்மொழியிலேயே நடைபெறுவதையும்  அனைத்து அரசு ஆணைகளையும் மக்களின் தாய்மொழியிலேயே வெளியிடப்படுவதையும் பார்க்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.  நீதிமன்ற நடவடிக்கைகளில்  உள்ளுர் மொழியே பயன்படுத்த வேண்டும் என்றும் திரு வெங்கய்யா நாயுடு கேட்டுக் கொண்டார்,

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்.  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1807258

***************



(Release ID: 1807276) Visitor Counter : 211