குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

குடியரசு துணைத்தலைவர் தமது இல்லத்தில் பள்ளிக் குழந்தைகளுடன் ஹோலிப் பண்டிகையை கொண்டாடினார்

Posted On: 18 MAR 2022 1:39PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு, இன்று புதுதில்லியில் உள்ள குடியரசு துணைத்தலைவர் மாளிகையில், பள்ளிக் குழந்தைகள் மற்றும் தமது அலுவலகப் பணியாளர்களுடன் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடினார். தில்லி மாநகராட்சி பள்ளிகள் உட்பட  நான்கு பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த மாணவர்கள் குடியரசு துணைத்தலைவர் மாளிகைக்கு சென்று, ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். அப்போது  பள்ளிக் குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன்  தேசப்பக்தி பாடல்களைப் பாடியதைக் கேட்டு குடியரசு துணைத்தலைவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

உங்களை யாராவது ஊக்கம் இழக்கச் செய்திருக்கிறார்களா என்று ஒரு மாணவர் கேட்டதற்கு பதில் அளித்த திரு நாயுடு, “இல்லை” நான் எப்போதும் ஊக்கம் இழந்தது கிடையாது,  ஆனால் சில நேரங்களில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவையின் கண்ணியத்திற்கு மாறாக நடந்து கொள்ளும் போது நான் ஏமாற்றம் அடைந்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.  மேலும் தமது வலிமையான மன உறுதிக்கு உந்துசக்தியாக திகழ்பவர் சர்தார் வல்லபாய் படேல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குடியரசு துணைத்தலைவர் என்ற முறையில், அலுவலகப் பணிகளையும், குடும்பப் பொறுப்புகளையும் எவ்வாறு சீராக சமாளிக்கிறீர்கள் என்ற மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த திரு நாயுடு, “நான் தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தபோது, எனது குடும்பத்திற்கு செய்ய வேண்டியதை செய்ததில்லை, ஆனால் குடியரசு துணைத்தலைவர் ஆனபிறகு தற்போது எனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முயற்சித்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் “குடியரசு துணைத்தலைவர் மற்றும் மாநிங்களவைத்தலைவர் என்ற முறையில், நான் சில அரசியல் சாசன கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. எனினும்,  எனது பேத்தி மற்றும் பேரனுடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி வருகிறேன்”  என்றும் அவர் தெரிவித்தார்.

இளைஞர்கள் தங்களது தாய், தாய்நாடு, மற்றும் தாய்மொழியை எப்போதும் நேசிப்பதோடு உரிய மரியாதையும் அளிக்க வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் அறிவுறுத்தினார். “நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்க வாழ்க்கையை அர்ப்பணித்து பணியாற்ற வேண்டும்” என்றும் அவர்களிடம் தெரிவித்தார். ‘பகிர்ந்து கொள் மற்றும் கவனித்து கொள்’ என்ற நமது நாகரீக நற்பண்புகள் நீண்ட நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய திரு நாயுடு, மாணவர்கள் கருணைக் குணத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு ஆகியோர் தொலைபேசியில் ஹோலிப் பண்டிகை வாழ்த்தைப் பரிமாறிக் கொண்டனர். பிரதமர் திரு நரேந்திர மோடி, ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து குடியரசு துணைத்தலைவருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.  

------



(Release ID: 1807163) Visitor Counter : 150