வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான 5-வது இந்தியா-கனடா அமைச்சர்கள் நிலைப் பேச்சுவார்த்தையின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 11 MAR 2022 5:21PM by PIB Chennai

வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பாக அமைச்சர்களுக்கிடையேயான ஐந்தவாது பேச்சுவார்த்தையை இந்தியாவும் கனடாவும் இன்று நடத்தின.

வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளி அமைச்சர், திரு பியூஷ் கோயல் மற்றும் கனடா அரசின் சிறு வணிகம், ஏற்றுமதி மேம்பாடு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் திருமதி மேரி என்ஜி ஆகியோர் இதற்குத்  தலைமை வகித்தனர்.

இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வலுவான வர்த்தக மற்றும் பொருளாதார உறவை அமைச்சர்கள் அடிக்கோடிட்டுக் காட்டியதுடன், இருதரப்பு உறவுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தத்  தீர்மானித்துள்ளனர்.

கொவிட்-19 பெருந்தொற்றின் விளைவாக ஏற்பட்ட பொருளாதாரப்  பாதிப்பிற்குப் பிறகு 2021-ல் இருதரப்பு வர்த்தகத்தின் வலுவான மீட்சியைப் பற்றி அமைச்சர்கள் திருப்தி தெரிவித்தனர், இருதரப்புப்  பொருட்களின் வர்த்தகம் 6.29 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியதுடன் ஒப்பிடும்போது 12% வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.

இருதரப்பு உறவை மேம்படுத்துவதில் சேவைத் துறையின் பங்களிப்பை அமைச்சர்கள் வலியுறுத்தியதுடன், இருதரப்பு சேவை வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான குறிப்பிடத்தக்க சாத்தியக்கூறுகளையும் குறிப்பிட்டனர். இரு வழி அந்நிய நேரடி முதலீட்டின் வளர்ச்சி மற்றும் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை ஆழப்படுத்துவதில் அதன் பங்களிப்பையும் அமைச்சர்கள் பாராட்டினர். வர்த்தகச்  சூழலை மேம்படுத்தவும், முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக மாற்றவும் இரு நாடுகளும் மேற்கொண்ட பல்வேறு சீர்திருத்தங்கள் மற்றும் முயற்சிகளை அமைச்சர்கள் வரவேற்றனர்.

இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே தற்போதுள்ள வர்த்தக ஒத்துழைப்புகளை அமைச்சர்கள் எடுத்துரைத்ததோடு பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகிய இரண்டிலும் முன்னுரிமை மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் உள்ள வாய்ப்புகளைத்  திறப்பதன் மூலம் இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்தனர். வேளாண் பொருட்கள், வேதிப்பொருட்கள் , காலணி, ஜவுளி, வாகனங்கள், எரிசக்தி, மின்னணுவியல், கனிமங்கள், உலோகங்கள், நகர்ப்புற வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா போன்ற அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் மேம்பட்ட கூட்டுறவு  மற்றும் ஒத்துழைப்பின் மூலம் வர்த்தக மற்றும் வணிக உறவுகளை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

வலுவான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை உருவாக்குவதற்கும் இரு நாடுகளுக்கு இடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் அமைச்சர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை அமைச்சர்கள் கோடிட்டுக் காட்டினார்கள். வர்த்தகம், முதலீடு மற்றும் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த உதவும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு விரிவான வர்த்தக ஒப்பந்தத்தின் அவசியத்தை உணர்ந்த அமைச்சர்கள், இந்தியா-கனடா விரிவான பொருளாதாரக்  கூட்டு ஒப்பந்தப்  பேச்சுவார்த்தைகளை முறைப்படி மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டனர்.

இடைக்கால ஒப்பந்தம் அல்லது ஆரம்ப முன்னேற்ற வர்த்தக ஒப்பந்தத்தைப்  பரிசீலிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர், பொருட்கள், சேவைகள், பிறப்பிட விதிகள், சுகாதாரம் மற்றும் தாவர சுகாதார நடவடிக்கைகள், வர்த்தகத்திற்கான தொழில்நுட்பத்  தடைகள் மற்றும் தகராறு தீர்வு ஆகியவற்றில் உயர் மட்ட உறுதிப்பாடுகள் உள்ளிட்டவை இடைக்கால ஒப்பந்தத்தில் அடங்கும். மேலும், பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட பிற பகுதிகளையும் உள்ளடக்கியதாக அது இருக்கலாம்.

பல்வேறு இருதரப்பு வர்த்தக விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் விவாதித்தனர். பருப்பு வகைகளில் பூச்சி அபாய மேலாண்மை மற்றும் இந்திய விவசாயப் பொருட்களான ஸ்வீட் கார்ன், பேபி கார்ன் மற்றும் வாழைப்பழம் போன்றவற்றிற்கான சந்தை அணுகல் தொடர்பான கனடாவின் அமைப்பு அணுகுமுறையை அங்கீகரிப்பது தொடர்பாக தீவிரமான பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர். பருப்பு இறக்குமதியை அனுமதிப்பதற்கான இந்தியாவின் பரிசீலனையை கனடா வரவேற்றது.

இந்திய இயற்கைப்  பொருட்களின் ஏற்றுமதிகளை எளிதாக்குவதற்காக அபேடாவிற்கு (வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்) அங்கீகாரம் அளிப்பது குறித்து வேகமாக பரிசீலிக்க கனடா ஒப்புக்கொண்டது. 

முக்கியமான துறைகளில் நெகிழ்வுத்தன்மை மிக்க விநியோகச் சங்கிலிகளை நிறுவுவதன் முக்கியத்துவத்தை அமைச்சர்கள் ஒப்புக்கொண்டதுடன், இந்தத் துறையில் ஒத்துழைப்பது குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். மருந்துகள், முக்கியமான மற்றும் அரிதான பூமி கனிமங்கள், சுற்றுலா, நகர்ப்புற உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சுரங்கம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை அவர்கள் வலியுறுத்தினர்.

தரமான மற்றும் மலிவு விலையில் மருந்துப் பொருட்களை, குறிப்பாக பொது மருந்துகளை வழங்குவதில் கனடாவின் நம்பகமான பங்குதாரராக இந்தியா இருப்பதால், பொதுச்  சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர்.

சுற்றுலாத்துறையில் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அமைச்சர்கள் அங்கீகரித்துள்ளனர்.

விதிகள் அடிப்படையிலான, வெளிப்படையான, பாரபட்சமற்ற, திறந்த மற்றும் உள்ளடக்கிய பலதரப்பு வர்த்தக அமைப்புக்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய அமைச்சர்கள், அதை மேலும் வலுப்படுத்த இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டனர்.

இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவின் முழுத் திறனையும் பயன்படுத்திக் கொள்வதற்குத் தொடர்புகளை உருவாக்குவதற்கும், துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் நீடித்த உத்வேகத்தை வழங்குவதில் தொடர்ந்து ஈடுபடவும்  அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805112

                           ************************

 

 (Release ID: 1805185) Visitor Counter : 149


Read this release in: English , Urdu , Hindi , Bengali