அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்தியா – கனடா இடையே பி்ரத்யேக அறிவியல் தொழில்நுட்ப நடவடிக்கைகளுக்காக, இருதரப்பு மையம் ஒன்று அமைக்கப்படவிருப்பதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்
Posted On:
11 MAR 2022 5:37PM by PIB Chennai
கனடா நாட்டின் சர்வதேச வர்த்தகம், ஏற்றுமதி அபிவிருத்தி, சிறு வர்த்தகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி மேரி யிங் தலைமையிலான தூதுக்குழுவினர், புதுதில்லியில் இன்று மத்திய அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்து, பல்வேறு முக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது, பசுமைத் தொழில்நுட்பம், நவீன பொறியியல் மற்றும் தயாரிப்பு, வேளாண்மை மற்றும் உணவுத் தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் மாற்றம், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் சுகாதார சேவைத்துறைகளில், ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் அடையாளம் காணப்பட்டது.
கனடா தூதுக்குழுவினரை வரவேற்றுப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், உயர்தர ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் தான் வருங்கால பொருளாதாரத்திற்கு அவசியம் என்றார். இந்தியாவின் ஆழ்கடல் மற்றும் கடல் இயக்கங்களில் இதுவரை கண்டறியப்படாத வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள முன்வருமாறு கனடாவிற்கு அழைப்பு விடுத்தார்.
இந்தியா–கனடா இடையேயான இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை புதுப்பிக்க வேண்டியிருப்பதாக குறிப்பிட்ட அவர், இந்த ஒப்பந்தங்கள் மே 2022-ல் நடைபெற உள்ள கூட்டுக்குழுவின் கூட்டத்தின் போது கையெழுத்தாகும் என்றும் தெரிவித்தார். மத்திய அறிவியல் - தொழிலக ஆராய்ச்சிக்குழுமம், கனடாவின் ஆராய்ச்சி அமைப்புகளுடன் இணைந்து ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முனைப்புடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805118
***************
(Release ID: 1805145)
Visitor Counter : 204