பிரதமர் அலுவலகம்

மக்கள் மருந்தகத் திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் உரையாடல்

8500 மக்கள் மருந்தகங்கள் வெறும் அரசு அங்காடிகள் அல்ல, எளிய மக்களுக்கு தீர்வுகளை வழங்கும் இடமாக அவை வேகமாக மாறி வருகின்றன

புற்றுநோய், காசநோய், சர்க்கரை நோய், இதய நோய் போன்ற நோய்களுக்கான சிகிச்சைக்குத் தேவையான 800-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலையை அரசு கட்டுப்படுத்தியுள்ளது

"தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பாதி இடங்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளோம்"

Posted On: 07 MAR 2022 2:03PM by PIB Chennai

மக்கள் மருந்தக உரிமையாளர்கள் மற்றும் திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். பொது மருந்துகளின் பயன்பாடு மற்றும் மக்கள் மருந்தகத்  திட்டத்தின்  நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் மார்ச் 1-ம் தேதி முதல் மக்கள் மருந்தக வாரம் கொண்டாடப்படுகிறது. "மக்கள் மருந்தகம், மக்கள் பயன்பாடு" என்பது இந்த வார விழா நிகழ்வின் கருப்பொருள் ஆகும்.

மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பாட்னாவைச் சேர்ந்த பயனாளியான திருமதி ஹில்டா அந்தோணியுடன் உரையாடிய பிரதமர், மக்கள் மருந்தக மருந்துகளைப் பற்றி அவருக்கு எப்படித் தெரிந்தது என்று கேட்டார். மருந்துகளின் தரம் குறித்தும் கேட்டறிந்தார். 1200-1500 ரூபாய்க்கு மாதாந்திர மருந்துகளைப் பெறுவதற்குப் பதிலாக 250 ரூபாய்க்கு மருந்துகளைப் பெற முடிந்ததால் அவர் மருந்துகளால் பெரிதும் பயனடைந்ததாக பதிலளித்தார். சேமித்து வைக்கும் பணத்தைச்  சமூகப் பணிகளுக்காகச் செலவிடுகிறேன் என்றார். அவரது உணர்வைப் பாராட்டிய பிரதமர், அவரைப் போன்றவர்கள் மூலம் மக்கள் மருந்தகங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும் என்று நம்பினார். இந்தத்  திட்டத்திற்கு நடுத்தர வர்க்கத்தினர் சிறந்த தூதர்களாக  இருக்க முடியும் என்றார். சமூகத்தின் நடுத்தர, கீழ்-நடுத்தர மற்றும் ஏழைப் பிரிவினரின் நிதி நிலைமையில் நோய்களின் தாக்கம் குறித்தும் அவர் பேசினார். மக்கள் மருந்தகத்  திட்டத்தின் பலன்களைப் பற்றிப் பேசுமாறு சமூகத்தின் எழுத்தறிவு பெற்ற பிரிவினருக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

புவனேஸ்வரை சேர்ந்த மாற்றுத் திறனாளி பயனாளி திரு சுரேஷ் சந்திர பெஹெராவுடன் உரையாடிய பிரதமர், மக்கள் மருந்தகத்   திட்டம் தொடர்பான அவரது அனுபவம் பற்றிக் கேட்டறிந்தார். அவருக்குத்  தேவையான அனைத்து மருந்துகளும் மக்கள் மருந்தகக்  கடையில் கிடைக்கிறதா என்றும் பிரதமர் கேட்டார். தனது பெற்றோருக்கும் மருந்துகள் தேவைப்படுவதால், அவர் அனைத்து மருந்துகளையும் கடையில் இருந்து பெறுவதாகவும், ஒவ்வொரு மாதமும் 2000-2500 ரூபாய் சேமிப்பதாகவும் திரு பெஹெரா கூறினார். அவரது குடும்பத்தினர் குணமடையவும், நலம் பெறவும் பிரதமர் ஜெகநாதரிடம் பிரார்த்தனை செய்தார். துணிச்சலுடன் போராடும் மாற்றுத் திறனாளியான திரு பெஹராவின் உணர்வை அவர் பாராட்டினார்.

மைசூரைச் சேர்ந்த செல்வி பபிதா ராவுடன் உரையாடிய பிரதமர், இத்திட்டத்தின் மூலம் அதிகமான மக்கள் பயன்பெறும் வகையில் சமூக ஊடகங்கள் மூலம் செய்தியைப் பரப்புமாறு வலியுறுத்தினார்.

சூரத்தைச் சேர்ந்த திருமதி ஊர்வசி நிரவ் படேல், தனது பகுதியில் மக்கள் மருந்தகங்களை ஊக்குவிக்கும் பயணத்தையும், குறைந்த விலை சானிட்டரி பேட் எனும் சுகாதார திண்டுகளை தனது முயற்சியின் மூலம் மேலும் பலருக்கு வழங்க மக்கள் மருந்தகத்  திட்டம் எப்படி உதவியது என்பதையும் பிரதமரிடம் விவரித்தார். ஒரு அரசியல் ஆர்வலராக அவரது சேவை மனப்பான்மையை பிரதமர் பாராட்டினார். பொது வாழ்வில் சேவையின் பங்கை இது மேம்படுத்தும். பிரதமர் வீட்டு வசதித்  திட்ட பயனாளிகள் மற்றும் பெருந்தொற்றின் போது இலவச ரேஷன் பொருட்களை பெற்ற பயனாளிகளிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

ராய்ப்பூரைச் சேர்ந்த திரு ஷைலேஷ் கண்டேல்வால் என்ற மருத்துவர், மக்கள் மருந்தக திட்டத்துடனான தனது பயணத்தைப் பற்றி பேசினார். மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பதை நன்றாக உணர்ந்ததாக கூறிய அவர், இந்தச்  செய்தியை தனது நோயாளிகள் அனைவருக்கும் பரப்பியதாகத் தெரிவித்தார். மக்கள் மருந்தகங்களை மக்கள் மத்தியில் ஊக்குவிக்குமாறு மற்ற மருத்துவர்களையும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

 

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், மக்கள் மருந்தகங்கள் உடலுக்கு மருந்து அளிக்கும் மையங்களாக மட்டுமில்லாது மனத்தின் பதட்டத்தையும் குறைக்கின்றன என்றும் மக்களின் பணத்தைச் சேமிப்பதன் மூலம் அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் மையங்களாக அவை உள்ளன என்றும் கூறினார். இதுபோன்ற பலன்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும், நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கிடைத்து வருவதாக பிரதமர் மன நிறைவு  தெரிவித்தார். 1 ரூபாய் சானிட்டரி நாப்கினின் வெற்றியையும் அவர் குறிப்பிட்டார். 21 கோடி சானிட்டரி நாப்கின்கள் விற்பனை , நாடு முழுவதும் பெண்களின் வாழ்க்கையை மக்கள் மருந்தகங்கள் எளிதாக்கியுள்ளன என்பதைக் காட்டுகிறது என்றார். .

நாட்டில் தற்போது 8,500-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் தெரிவித்தார். சாமானியர்களுக்கான தீர்வு மையங்களாக இந்த மையங்கள் தற்போது மாறி வருகின்றன. புற்றுநோய், காசநோய், நீரிழிவு, இதயநோய் போன்ற நோய்களுக்கான சிகிச்சைக்குத் தேவையான 800-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலையையும் அரசு கட்டுப்படுத்தியுள்ளது என்றார் அவர். ஸ்டண்ட் மற்றும் முழங்கால் மாற்று சிகிச்சைக்கான செலவையும் கட்டுக்குள் வைத்திருப்பதை அரசு உறுதி செய்துள்ளது. மக்களுக்கு மலிவு விலையில் மருத்துவ சேவை வழங்குவது தொடர்பான புள்ளிவிவரங்களை அவர் வழங்கினார். 50 கோடிக்கும் அதிகமான மக்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளிகளாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் 3 கோடிக்கும் அதிகமானோர் பயன்பெற்று ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே  70 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டத்தால் 550 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. முழங்கால் மாற்று மற்றும் மருந்து விலைக் கட்டுப்பாடு மூலம் 13 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமானது.

 

சில நாட்களுக்கு முன், ஏழை மற்றும் நடுத்தரக் குழந்தைகள் பயன்பெறும் மற்றொரு பெரிய முடிவை அரசு எடுத்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். “தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பாதி இடங்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளோம்,” என்று அவர் தெரிவித்தார்

***************



(Release ID: 1803623) Visitor Counter : 206