குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களின் கண்ணியத்தை பாதுகாப்பதுடன் உயர்தரத்தையும் பராமரிக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதிகளுக்கு குடியரசு துணைத் தலைவர் அறிவுரை
प्रविष्टि तिथि:
04 MAR 2022 4:03PM by PIB Chennai
மக்கள் பிரதிநிதிகள், உயர் அரசியல் சாசன பொறுப்பு வகிப்பவர்கள், நாடாளுமன்றம் போன்ற அமைப்புகளின் கண்ணியத்தைப் பாதுகாப்பதுடன் உயர்தரத்தையும் பராமரிக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு வெங்கய்யா நாயுடு அறிவுரை வழங்கியுள்ளார்.
கோவா ஆளுநர் மாளிகையில் நவீன கலை வடிவுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள தர்பார் மண்டபத்தை திறந்து வைத்து உரையாற்றிய அவர், நாடாளுமன்றத்தில் அடிக்கடி ஏற்படும் இடையூறுகள் குறித்தும், சில சட்டமன்றங்களில் அண்மையில் நடந்த நிகழ்வுகள் குறித்தும் கவலை தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகள் பட்ஜெட்டை விமர்சிக்கலாம் அல்லது தங்களுக்கு விருப்பமில்லாத முறையை குறைகூறலாம் அதேசமயம் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் எதையும் அவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும், அரசியல் சாசன அமைப்புகளுக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மிகப்பெரிய நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற வகையில், தேர்தல்களின் போது அமைதியான முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி இந்தியா உலகத்திற்கு பெரும் உதாரணமாகத் திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார். “ஜனநாயகத்தில் நீங்கள் விரும்பவில்லை என்றால் தாராளமாக விமர்சிக்கலாம், உங்கள் முறை வரும் போது அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவிக்கலாம். மக்கள் அளித்த தீர்ப்புக்கு மரியாதை செலுத்தும் பொறுமையை நாம் கடைபிடிக்க வேண்டும்” என்று குடியரசு துணைத் தலைவர் கூறினார்.
இந்தியா ஒருகாலத்தில் உலகிற்கே குருவாக திகழ்ந்தது என்றும், அமைதியை விரும்புகின்ற இந்தியா எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தியதில்லை என்றும் அவர் தெரிவித்தார். நலமாக இருக்க வேண்டும் என்பதே இந்திய தத்துவத்தின் முக்கிய அம்சம் என்று அவர் குறிப்பிட்டார்.
கோவா ஒரு சிறப்பான இடம் என்று கூறிய திரு நாயுடு, “கலாச்சாரம், மொழி பன்மைத்துவம், இயற்கையுடன் இணைந்த இந்த மாநிலத்து மக்களின் விருந்தோம்பல் ஆகியவை எனது இதயத்தில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது” என்று கூறினார். கோவாவின் இயற்கை அழகு, விரிவான வனப் பகுதிகள், செழுமையான கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றுடன் இந்தியாவின் உயரிய சுற்றுலாத் தலமாக அது விளங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.
தர்பார் மண்டபம், கோவாவின் கட்டிடக் கலையின் சின்னமாக திகழ்கிறது என்று கூறிய திரு நாயுடு, இந்த மண்டபத்தில் 800 பேர் அமரலாம் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கோவா மாநில ஆளுநர் திரு பி எஸ் ஸ்ரீதரன் பிள்ளை, முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் மற்றும் சுற்றுலாத் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக், எதிர்க்கட்சித் தலைவர் திரு திகம்பர் காமத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
***************
(रिलीज़ आईडी: 1802999)
आगंतुक पटल : 240