அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
முழுமையான சுகாதார சேவைகளின் முக்கியத்துவத்தை பெருந்தொற்று நமக்கு கற்றுக்கொடுத்தது: மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங்
Posted On:
01 MAR 2022 5:31PM by PIB Chennai
முழுமையான சுகாதார சேவைகளின் முக்கியத்துவத்தை பெருந்தொற்று நமக்கு கற்றுக்கொடுத்தது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர். ஜிதேந்திர சிங் கூறினார்.
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் உள்ள ஜாமியா ஹம்தார்த் பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை உரையாற்றிய அவர், பெருந்தொற்று கடந்துவிட்ட போதிலும், போதுமான சிகிச்சை வழங்கல் மற்றும் பல்வேறு நோய்களை தடுப்பதற்காக மனித குலத்தின் நன்மையைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த மருத்துவ முறையை முறைப்படுத்துவது அவசியம் என்று கூறினார்.
சுகாதார சேவைகள் துறையில் மிகச் சிறந்த விளைவுகளை எட்டுவதற்காக அனைத்து சிகிச்சை முறைகள் மற்றும் யுத்திகளை முறைப்படுத்துவது மிகவும் முக்கியம் என்று டாக்டர். ஜிதேந்திர சிங் தெரிவித்தார். ஜாமியா ஹம்தார்த் ஆராய்ச்சி ஊக்குவிப்பு திட்டங்களுக்கு அனைத்து வகையான அரசு ஆதரவும் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நிதி உதவியுடன் நிறுவப்பட்ட உலகின் அதிநவீன டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பி வசதியை திறந்து வைத்துப் பேசிய அமைச்சர் கொவிட்டின் போது ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, யோகா, இயற்கை மருத்துவம் மற்றும் இதர முறைகளிலிருந்து உருவாக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி வழிமுறைகளுக்காக மேற்கத்திய நாடுகள் இந்தியாவை அணுகின என்றார்.
2014-ம் ஆண்டு திரு. நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதிலிருந்து மருத்துவ மேலாண்மைக்கான உள்நாட்டு மரபுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர். ஜிதேந்திர சிங் கூறினார். சர்வதேச யோகா தினத்தை அனுசரிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் ஒருமித்த தீர்மானத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி கொண்டு வந்ததன் மூலம் உலகின் ஒவ்வொரு மொழியிலும் யோகா இன்று சென்றடைந்து இருப்பதாக அவர் கூறினார்.
உள்நாட்டு மருத்துவ மேலாண்மை முறையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு ஆயுஷ் அமைச்சகத்தையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி உருவாக்கினார் என்று அமைச்சர் கூறினார். மேலும் யுனானி மருத்துவத்தில் எம் டி முதுநிலை படிப்பை ஸ்ரீநகரில் அறிமுகப்படுத்தியதும் மோடி அரசு தான் என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1802115
************************
(Release ID: 1802159)
Visitor Counter : 166