வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

ராஜஸ்தானில் ₹250 கோடி மதிப்பீட்டில் மரபு கழிவுகளுக்கு தீர்வு காண இந்திய அரசு ஒப்புதல்.

Posted On: 25 FEB 2022 6:55PM by PIB Chennai

புவியியல் ரீதியாக மிகப்பெரிய மாநிலமான ராஜஸ்தான், 3.4 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது, ஆரவல்லி மலைத்தொடர், பாரத்பூரின் கியோலேடியோ தேசிய பூங்கா, ரந்தம்பூர் தேசிய பூங்கா மற்றும் முகுந்த்ரா ஹில்ஸ் புலிகள் காப்பகம் போன்ற பலவற்றுடன் இயற்கையுடன் பழமையான உறவைப் பகிர்ந்து கொள்கிறது.

அதன் மக்கள்தொகையில் 25% (2011 கணக்கெடுப்பின் படி) நகர்ப்புறங்களில் வசிக்கும் நிலையில், 3.5 லட்சத்திற்கும் அதிகமான தனிநபர் வீட்டுக் கழிப்பறைகளையும் 31,000 க்கும் மேற்பட்ட சமூக மற்றும் பொது கழிப்பறைகளையும் நகர்ப்புற குடியிருப்பாளர்களுக்காக 2014 முதல் தூய்மை இந்தியா திட்டத்தின்  பல்வேறு திடக்கழிவு மேலாண்மை முன்முயற்சிகளின் மூலம் அம்மாநிலம் கட்டியுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள 198 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நாள் ஒன்றுக்கு 4,800 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் உருவாகின்றன. இந்தக் கழிவுகளில் 28% மட்டுமே அறிவியல் பூர்வமாக செயலாக்கப்படுகிறது. துங்கர்பூர் போன்ற நகரங்கள் முன்னுதாரணமாக பணியாற்றும் போதிலும், மூலத்திலேயே கழிவுகளை தரம் பிரிக்கவும், கழிவுகளை பதப்படுத்தும் திறனை மேம்படுத்தவும், பாரம்பரிய குப்பை கிடங்குகளை அகற்றும் பணியை தொடங்கவும் அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

அம்ருத் திட்டத்துடன் இணைந்து தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புறம் 2.0, அக்டோபர் 1, 2021 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. நிலையான சுகாதாரம் மற்றும் அறிவியல் கழிவு செயலாக்கத்தின் வாயிலாக ‘குப்பை இல்லாத நகரங்கள்’ எனும் இலக்கை அடைவது இதன் நோக்கமாகும்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை படிப்படியாக ஒழிப்பது, கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவுகளை அறிவியல் பூர்வமாக செயலாக்குவதை உறுதி செய்தல், கழிவு முதல் உரம், கழிவு முதல் எரிசக்தி, மற்றும் புத்தாக்க வசதிகளை நிறுவுதல் ஆகியவற்றில் தேசிய கவனம் செலுத்தப்படுகிறது.

மாநிலத்திற்கான தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புறம் 2.0 பட்ஜெட் ஒதுக்கீடு ₹1,765.80 கோடி ஆகும். தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புறத் திட்டத்தின் கீழ் 2014-19-ல் ஒதுக்கப்பட்ட ₹705.46 கோடியுடன் ஒப்பிடும் போது இது 2.5 மடங்கு அதிகம் ஆகும்.

தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புறம் 2.0-ன் கீழ், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ராஜஸ்தானின் உள்ளாட்சித் துறையுடன் இணைந்து திறன் மேம்பாட்டுப் பயிலரங்குகள், ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கும் திடக்கழிவு மேலாண்மைக்கான செயல்திட்டத் தயாரிப்பு உள்ளிட்டவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

24 நகரங்களில் உள்ள 45.5 லட்சம் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான மரபு கழிவுகளுக்கு தீர்வு காண்பதற்காக மாநிலம் சமர்ப்பித்த ₹250.15 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மாநிலத்திற்கு ஊக்கமளித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1801163

                           ************************

 (Release ID: 1801216) Visitor Counter : 182


Read this release in: English , Urdu , Hindi