பாதுகாப்பு அமைச்சகம்

40 நாடுகளுடன் இணைந்து இந்திய கடற்படை ‘மிலன் -2022’ கூட்டுப் பயிற்சி - பிப்ரவரி 25ஆம் தேதி தொடக்கம்

Posted On: 23 FEB 2022 6:26PM by PIB Chennai

இந்திய கடற்படை மேற்கொள்ளும் மிலன்- 2022 கூட்டுப் பயிற்சி, விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி 25ம் தேதி தொடங்குகிறது. இதில் 40 நாடுகளின் போர்க்கப்பல்கள் மற்றும் அதிகாரிகளின் குழுவினர் கலந்து கொள்கின்றனர்.

9 நாட்களில் 2 கட்டங்களாக இந்த பயிற்சி நடத்தப்படுகிறது. பிப்ரவரி 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை, விசாகப்பட்டினம் துறைமுகத்தில் முதல் கட்ட பயிற்சி நடக்கிறது. கடல் பகுதியில் மேற்கொள்ளப்படும் இரண்டாம் கட்ட பயிற்சி மார்ச் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.  75வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் இந்தியா, மிலன் 2022 பயிற்சி மூலம் தனது சாதனையை நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளது. இந்தாண்டு மிலன் கூட்டுப் பயிற்சியின் கருப்பொருள் தோழமை, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை ஆகும்.  இந்தியாவை பொறுப்புள்ள கடல்சார் நாடாக உலக நாடுகளுக்கு காட்சிப்படுத்துவது தான் , இந்த பயிற்சியின் நோக்கம்.  இந்த பயிற்சி மூலம் நட்பு நாடுகளின் கடற்படை  திறன்கள் மேம்படுத்தப்படும்.

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் மிலன் கூட்டுபயிற்சி முதன்முதலில் கடந்த 1995ம் ஆண்டு அந்தமான் மற்றும் நிகோபார் கடற்படை கட்டுப்பாட்டு மையத்தால் ஏற்படுத்தப்பட்டது. கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய மிலன் கூட்டு பயிற்சி, கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டுக்கு ஒத்தி போடப்பட்டது.

ஆரம்பத்தில் இந்தோனேஷியா, சிங்கப்பூர், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் மட்டுமே இந்த பயிற்சியில் பங்கேற்றன. கிழக்கு கொள்கை, சாகர் திட்டம் மூலம் தற்போது இந்த பயிற்சி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பயிற்சியில் இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள 14 நாடுகள் பங்கேற்றன. தற்போது இந்த மிலன் கூட்டு பயிற்சி மேலும் விரிவுபடுத்தப்பட்டு, தற்போது 40 நாடுகளின் போர்க்கப்பல்கள் மற்றும் கடற்படை அதிகாரிகளின் குழுவினர் இந்தாண்டு மிலன் கூட்டு பயிற்சியில் பங்கேற்கின்றனர்.  கடற்சார் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கிலும் பல நாட்டு கடற்படை அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் உரையாற்றுகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800604

*******



(Release ID: 1800660) Visitor Counter : 608


Read this release in: Hindi , English , Marathi , Telugu