குடியரசுத் தலைவர் செயலகம்

மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரியில் உள்ள அம்படவே கிராமத்தில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நினைவிடத்தை குடியரசுத் தலைவர் பார்வையிட்டார்.

Posted On: 12 FEB 2022 6:26PM by PIB Chennai

மகாராஷ்டிரா மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள அம்படவே கிராமத்திற்கு இன்று (பிப்ரவரி 12, 2022) சென்ற குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் அஸ்தி கலசத்திற்கு பூஜை செய்து, பகவான் புத்தர், டாக்டர் அம்பேத்கர், திருமதி ரமாபாய் அம்பேத்கர் மற்றும் ராம்ஜி அம்பேத்கர் ஆகியோருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், 1900-ம் ஆண்டு பாபாசாகேப் பள்ளியில் சேர்ந்த நவம்பர் 7-ம் தேதி மாணவர் தினமாக மகாராஷ்டிராவின் பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது என்றார். மகாராஷ்டிர அரசின் இந்த முயற்சியைப் பாராட்டிய அவர், பாபா சாகேப்புடன் தொடர்புடைய ஒவ்வொன்றும் கருணை மற்றும் சமத்துவச்  சமுதாயத்தின் முக்கியத்துவத்தை உணர நம்மை ஊக்குவிக்கிறது என்று கூறினார்.

 

பாபா சாகேப் அம்பேத்கரின் அர்ப்பணிப்பு மற்றும் கல்விக்கு அவர் அளித்த முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில் நவம்பர் 7-ம் தேதியை நாடு முழுவதும் மாணவர் தினமாக கொண்டாடுவது குறித்து பரிசீலிக்கலாம் என்றார் அவர்.

 

அம்படவே கிராமத்திற்கு,உத்வேக மண் எனப் பொருள் படும்  'ஸ்பூர்த்தி-பூமி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், பாபாசாகேப் தனது வாழ்நாள் முழுவதும் முழு ஆற்றலுடன் பல்வேறு துறைகளில் பங்களித்ததால், அவரது மூதாதையர் கிராமத்தை 'ஸ்பூர்த்தி-பூமி' என்று அழைப்பது பொருத்தமானது என்று கூறினார்.

 

'ஸ்பூர்த்தி-பூமி' என்ற லட்சியத்தின்படி, பாபாசாகேப் எப்போதும் போற்றிக் கொண்டிருந்த நல்லிணக்கம், இரக்கம், சமத்துவம் போன்ற விழுமியங்களின் அடிப்படையில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சமூக அமைப்பு இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1797918

                                                                                                *****************



(Release ID: 1797943) Visitor Counter : 173