சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்தியாவில் தொற்றாத நோய்களின் நிலை
Posted On:
08 FEB 2022 12:33PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவின் (ஐசிஎம்ஆர்) 2017-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான நோய் சுமை முன்முயற்சி திட்டத்தின் “இந்தியா: தேசத்தின் ஆரோக்கியம்” என்ற ஆய்வு அறிக்கையின்படி, தொற்றாத நோய்களால் ஏற்படும் இறப்புகளின் விகிதம் 1990-ல் 37.9% ஆக இருந்து 2016-ல் 61.8% ஆக அதிகரித்துள்ளது.
இருதய நோய்கள், புற்றுநோய், நாள்பட்ட சுவாச நோய்கள் மற்றும் நீரிழிவு ஆகியவை நான்கு முக்கிய தொற்றாத நோய்கள் ஆகும். ஆரோக்கியமற்ற உணவு, உடல் செயல்பாடு இல்லாமை, புகையிலை மற்றும் மது ஆகியவை இவற்றின் காரணிகள் ஆக உள்ளன.
சுகாதாரம் என்பது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையிலும் , புற்றுநோய், நீரிழிவு, இருதய நோய்கள் மற்றும் பக்கவாதம் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டத்தின் கீழ் (2010-ல் தொடங்கப்பட்டது) மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை வழங்குகிறது.
தேசிய சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலிருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் இது வழங்கப்படுகிறது. உள்கட்டமைப்பு, மனித வள மேம்பாடு, சுகாதார மேம்பாடு மற்றும் தடுப்புக்கான விழிப்புணர்வை உருவாக்குதல், ஆரம்பகால நோயறிதல், மேலாண்மை மற்றும் தொற்று அல்லாத நோய்களின் சிகிச்சைக்காக உரிய சுகாதார வசதிகளை பரிந்துரைப்பதில் இந்தத் திட்டம் கவனம் செலுத்துகிறது.
இத்திட்டத்தின் கீழ், மாவட்ட அளவில் 677 சிகிச்சை மையங்கள், 187 மாவட்ட இதய சிகிச்சை பிரிவுகள், 266 மாவட்ட பகல்நேர பராமரிப்பு மையங்கள் மற்றும் சமூக சுகாதார மைய அளவில் 5392 சிகிச்சையகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: Https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796435
***************
(Release ID: 1796504)
Visitor Counter : 1642