ரெயில்வே அமைச்சகம்
ரயில் நிலையங்களின் மறு மேம்பாடு மற்றும் மறுசீரமைப்பு
Posted On:
04 FEB 2022 2:25PM by PIB Chennai
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று பதில் அளித்த ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்:
பல்வேறு அமைப்புகள் மூலமாக ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கும், மறுசீரமைப்பதற்கும் தொழில்நுட்ப-பொருளாதார சாத்தியக்கூறு ஆய்வுகளை ரயில்வே அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் உள்ள ரயில் நிலையங்களின் வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளத் திட்டமிடப்படுகின்றன. குறிப்பாக , மேற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள குஜராத் தலைநகர் காந்தி நகர், மேற்கு மத்திய ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள மத்தியப் பிரதேசத்தின் ராணி கமலாபதி ரயில் நிலையம் ஆகியவற்றில் தொழில்நுட்ப -பொருளாதார சாத்தியக்கூறு ஆய்வுகள் அடிப்படையில் தொடக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு ரயில்வேயின் கீழ் உள்ள பெங்களூரு சர் எம் விஷ்வேஸ்வரய்யா ரயில்நிலையம் செயல்படுவதற்கு தயார் நிலையில் உள்ளது.
மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையத்தில் கூட்டம் இல்லாத வகையில் நுழைவு / வெளியேறும் வழிகள் ரயில்நிலைய வளாகத்துக்குள் அமைக்கப்படுகின்றன. பயணிகளின் வருகை / புறப்பாடு என, தனி வழிகள் ஏற்படுத்தப்படும். முக்கிய நகரங்களில் சாத்தியமுள்ள இடங்களில் பஸ், மெட்ரோ போக்குவரத்தும் ஒருங்கிணைக்கப்படும். எளிதில் பயன்படுத்தும் வகையில், சர்வதேச அளவில் உள்ள அடையாளங்களுடன் வருகை, புறப்பாடு மற்றும் பார்க்கிங் வசதிகள் செய்யப்படும். இது போன்ற வசதிகளுடன், ரயில் நிலையங்கள் முதல் முறையாக மேம்படுத்தப்படுகின்றன. இதற்கு தொழில்நுட்ப-பொருளாதார சாத்தியக்கூறு ஆய்வுகளும், நகர்ப்புற / உள்ளாட்சி அமைப்புகளிடம் பல்வேறு சட்ட அனுமதிகளும் தேவைப்படுகிறது.
இவ்வாறு ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
----
(Release ID: 1795548)
Visitor Counter : 256