தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

பாகிஸ்தானிலிருந்து பொய்ச் செய்திகளைப் பரப்பும் அமைப்புகள் மீது இந்தியா கடும் நடவடிக்கை

இந்தியாவுக்கு எதிராக பொய்ச் செய்திகளைப் பரப்பும்
35 யுடியூப் அலைவரிசைகள், 2 இணையதளங்களுக்கு தடை

Posted On: 21 JAN 2022 6:10PM by PIB Chennai

டிஜிட்டல் ஊடகங்கள் வாயிலாக இந்தியாவுக்கு எதிராக திட்டமிட்டு பொய்ச் செய்திகளைப் பரப்பும் 35 யுடியூப் அலைவரிசைகள், 2 இணையதளங்களை தடை செய்ய மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானிலிருந்து செயல்படும் இந்த யுடியூப் அலைவரிசைகள் 1 கோடியே 20 லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்களையும், 130 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் கொண்டவையாகும். மேலும், இணையதளத்தில் இந்தியாவுக்கு எதிரான அவதூறு தகவல்களை பரப்பும் செயலில் ஈடுபட்டுள்ள 2 டுவிட்டர் கணக்குகள், 2 இன்ஸ்டாகிராம் கணக்குகள் மற்றுமொரு முகநூல் கணக்கும் மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் டிஜிட்டல் மீடியா விதிமுறைகள்) சட்டம் 2021, விதி 16-ன் கீழ் இதற்கான 5 உத்தரவுகளை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தனித்தனியாக பிறப்பித்துள்ளது.

இந்த சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களை இந்திய புலனாய்வு அமைப்புகள், உன்னிப்பாக கண்காணித்து, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அளித்த பரிந்துரையின் பேரில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், பாகிஸ்தானிலிருந்து செயல்படும் இந்த சமூக ஊடகங்களை தடை செய்துள்ளது. இவற்றில் சில யுடியூப் அலைவரிசைகள் பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளர்களால் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1791547

***************



(Release ID: 1791571) Visitor Counter : 249