அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட பசுமை எரிபொருட்கள் துறையில் இணைந்து செயல்பட இந்தியா – டென்மார்க் உடன்பாடு
Posted On:
19 JAN 2022 4:07PM by PIB Chennai
பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட பசுமை எரிபொருட்களுக்கான ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதென, இந்தியா - டென்மார்க் நாடுகளின் அறிவியல் & தொழில்நுட்ப கூட்டுக் குழுவின் கூட்டத்தில் இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தேசிய அளவிலான முக்கியமான முன்னுரிமை திட்டங்கள் மற்றும் இருநாடுகளிலும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, குறிப்பாக பசுமை ஆராய்ச்சி, தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகளில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளில் பசுமைத் திட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளை ஒரு இயக்கமாக இருதரப்பு ஒத்துழைப்பு மூலம் மேற்கொள்ள இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இரு நாடுளின் பிரதமர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பசுமை செயல்திட்ட ஒத்துழைப்புக்கான, 2020-25 செயல் திட்டத்தில் ஒப்புக்கொண்டபடி, பருவநிலை மாற்றம், பசுமைத் திட்டங்களுக்கு மாற்றம், எரிசக்தி, தண்ணீர், கழிவு, உணவு போன்ற துறைகளில் கூட்டாக செயல்பட வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்திற்கு மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் சர்வதேச ஒத்துழைப்பு பிரிவு ஆலோசகர் மற்றும் தலைவர் திரு எஸ் கே வர்ஷ்னீ மற்றும் டென்மார்க் அரசின் உயர்கல்வி மற்றும் அறிவியல் முகமையின் துணை இயக்குநர் டாக்டர் ஸ்டைன் ஜோர்ஜென் சென் ஆகியோர் கூட்டாக தலைமை வகித்தனர்.
------
(Release ID: 1791018)
Visitor Counter : 302