வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியா-இங்கிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளின் தொடக்கம் குறித்த கூட்டறிக்கை.
Posted On:
13 JAN 2022 4:16PM by PIB Chennai
இந்திய குடியரசு மற்றும் இங்கிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை இன்று முறைப்படி தொடங்கியது.
மத்திய வர்த்தகம், தொழில், நுகர்வோர் விவகாரம், உணவு, பொதுவிநியோகம் மற்றும் ஜவுளி துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், பிரிட்டன் நாட்டு சர்வதேச வர்த்தகத்துக்கான அமைச்சர் அன்னி –மேரி டிரவெலியன் ஆகியோர் புதுதில்லியில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.
நமது இரு பொருளாதாரங்களுக்கும் கணிசமான வாய்ப்பாகவும், இந்தியா-இங்கிலாந்து இருதரப்பு உறவில் குறிப்பிடத்தக்க தருணமாகவும் இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருக்கும்.
இந்தியா-இங்கிலாந்து இருதரப்பு வர்த்தக உறவு ஏற்கனவே குறிப்பிடத்தக்கதாக உள்ளது, மேலும் மே 2021-ல் பிரதமர் திரு .நரேந்திர மோடி மற்றும் பிரதமர் திரு. போரிஸ் ஜான்சன் அறிவித்த செயல்திட்டம்.. 2030-ன் ஒரு பகுதியாக, 2030-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன.
இரு நாடுகளிலும் உள்ள பணிகள், வணிகங்கள் மற்றும் சமூகங்களை ஆதரிக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள இந்தியாவும் இங்கிலாந்தும் விரும்புகின்றன.
மே 2021-ல் நமது பிரதமர்களால் தொடங்கப்பட்ட மேம்பட்ட வர்த்தக கூட்டாண்மைக்கு வலுவூட்ட நாம் விரும்புவதால், வர்த்தக பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கும் முன்னுரிமையாக இருக்கும்.
பேச்சுவார்த்தைகளின் போது மற்றும் விரிவான உடன்படிக்கைக்கான பாதையில், இரு நாடுகளுக்கும் விரைவில் பலன்களை உருவாக்கும் இடைக்கால ஒப்பந்தம் குறித்து இரு அரசுகளும் பரிசீலிக்கும். வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு இடையே, இந்தியா-இங்கிலாந்து வர்த்தக உறவை மேம்படுத்துவதிலும், வர்த்தக ஒப்பந்தத்திற்கு வெளியே உள்ள சந்தை அணுகல் தடைகளைத் தீர்ப்பதிலும் இந்தியா-இங்கிலாந்து கூட்டுப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகக் குழு தொடர்ந்து பணியாற்றும்.
முதல் சுற்று பேச்சுவார்த்தைகள் ஜனவரி 17-ம் தேதி தொடங்கும் என்றும், எதிர்கால சுற்று பேச்சுவார்த்தைகள் தோராயமாக ஐந்து வாரங்களுக்கு ஒரு முறை நடைபெறும் என்றும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்திய பேச்சுவார்த்தைக் குழுவிற்கு வர்த்தகத் துறையின் இணைச் செயலர் திருமதி. நிதி மணி திரிபாதி தலைமை தாங்குவார். இங்கிலாந்து சர்வதேச வர்த்தகத் துறையின் இந்திய பேச்சுவார்த்தைகளுக்கான இயக்குநர் ஹர்ஜிந்தர் காங் தலைமையில் இங்கிலாந்து பேச்சுவார்த்தைக் குழு அமையும்.
வணிகங்கள் மற்றும் நுகர்வோருக்கு நன்மை பயக்கும் பரந்த ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தையை நடத்துவதே இரு நாடுகளின் லட்சியம் ஆகும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1789653
****
(Release ID: 1789707)
Visitor Counter : 307