சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் – கரும்பு வளர்ப்பு நிறுவனத்திற்கு ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரி பாராட்டு

Posted On: 06 JAN 2022 3:57PM by PIB Chennai

கோவையில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கரும்பு உற்பத்தி நிறுவனம், “பழங்குடியினருக்கு அறிவுசார் அதிகாரமளித்தல்” என்ற இயக்கத்தையும், பழங்குடியினர் தொகுப்புத் திட்டத்தையும் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட அட்டகட்டியில் 5, ஜனவரி 2022 அன்று தொடங்கி உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் திரு.எம்.ஜி.கணேசன், பழங்குடியினர் தொகுப்புத் திட்டத்தை செயல்படுத்துவது என்ற இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் – கரும்பு உற்பத்தி நிறுவனத்தின் முடிவை வரவேற்றார். இந்த நிறுவனம் புலிகள்  காப்பகத்தில் தொலை தூரங்களில் வசிக்கும் பழங்குடியினரை அடையாளம் கண்டு அவர்களது நலனில் இயன்ற அளவு கவனம் செலுத்துவதாக அவர் கூறினார். மற்ற புலிகள் காப்பகங்கள் போலின்றி, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பல்வேறு வகையான உள்ளூர் இன மக்கள் இங்கு பெருமளவு வசிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஆசிய யானைகளைக் கையாள்வதில் தங்களுக்குள்ள அபரிமிதமான ஆற்றலால், யானைகளுக்கு பயிற்சி அளிப்பதில் ‘மலாசர்’ பழங்குடியின மக்கள் பேருதவி புரிவதாக திரு.கணேசன் தெரிவித்தார். எனவே பழங்குடியின மக்களை பாதுகாப்பது வனப்பகுதியை பாதுகாப்பதற்கு இணையானது என்றும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய டாக்டர் ஹேமா பிரபா, பொதுப்பிரிவு மக்களுடன் ஒப்பிடுகையில், பழங்குடி மக்களின் எழுத்தறிவுத் திறன் மிகவும் குறைவாக உள்ளது என்றார். பழங்குடி மக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள், தங்களது பொருளாதார வளர்ச்சி மற்றும்  முன்னேற்றத்திற்கு மட்டுமின்றி, தங்களது கலாச்சாரத்தை பேணிக்காக்கவும் கல்வியறிவு முக்கியம் என்பதை உணர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

*****


(Release ID: 1788002) Visitor Counter : 248


Read this release in: English , Urdu , Hindi