குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

புதிய கல்விக் கொள்கை தாய் மொழி விஷயத்தில் மகாத்மா காந்தியின் “அடிப்படைக் கல்வியை” பின்பற்றுகிறது: குடியரசு துணைத்தலைவர்

Posted On: 04 JAN 2022 1:13PM by PIB Chennai

தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளித்து பள்ளி மட்டத்தில் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் அடிப்படைக்கல்வி அம்சத்தை புதிய கல்விக் கொள்கை பின்பற்றுவதாக குடியரசு துணைத்தலைவர் திரு  எம் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.

வார்தாவில் இன்று மகாத்மா காந்தி சர்வதேச இந்திப் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், தாய்மொழியைப் பள்ளிகளில் பயிற்று மொழியாக வைப்பதுடன், மாணவர்களுக்கு கட்டாய இலவசக் கல்வி மற்றும் திறன் பயிற்சியை அளிக்க வேண்டும் என்பதை அடிப்படைக் கல்வி” என்ற பெயரில் வார்தாவில் 1937-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி முன்வைத்ததை சுட்டிக்காட்டினார்.  

நமது அரசியல் நிர்ணய சபையில், நீண்ட விவாதத்திற்கு பின்னர் இந்தி மொழி அலுவல் மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதை குறிப்பிட்ட திரு நாயுடு, எட்டாவது அட்டவணையில் இதர இந்திய மொழிகளுக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டினார்.  ஒவ்வொரு இந்திய மொழிக்கும் பெருமை மிக்க வரலாறும், செழுமை வாய்ந்த இலக்கியமும் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நம் நாட்டில் மொழிப்பன்மைத்துவம் இருப்பது நமக்கு நல்ல வாய்ப்பு என்று கூறினார். நமது மொழிகள் நமது கலாச்சார ஒற்றுமையின் அடையாளமாக இருப்பதால் இந்த மொழிப் பன்மைத்துவம் நமது வலிமையாக உள்ளது என்று அவர் கூறினார்.

மொழிப் பற்றி மகாத்மா காந்தியின் கருத்தைக் குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், மகாத்மாவைப் பொருத்தவரை மொழி என்பது தேசிய ஒற்றுமை என்று கூறினார்.  அவர் இந்தி மொழியை வலியுறுத்திய போதிலும், ஒவ்வொரு மனிதருக்கும் அவரது தாய்மொழி மீதான உணர்வை புரிந்து கொண்டார் என்றும், தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை சுதந்திரத்துடன் அவர் இணைத்துக் கொண்டார் என்றும் திரு நாயுடு தெரிவித்தார். இந்தியாவுடன்  வெளிநாடு வாழ் இந்தியர்களை இணைப்பதில், இந்திய மொழிகள் முக்கியப் பங்காற்றியதாக அவர் தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் அரசியல் சாசன சிற்பி பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கரின் சிலையை திறந்து வைத்த குடியரசு துணைத்தலைவர், டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் சமத்துவத்துக்காக வாழ்நாள் முழுவதும் போராடியதாக குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தையொட்டி அடல் பிகாரி வாஜ்பாய் பவன், சந்திரசேகர் ஆசாத் விடுதி ஆகியவற்றை அவர் திறந்து வைத்தார். ஐ.நா. பொதுச் சபையின் வாஜ்பாய் இந்தி மொழியில் ஆற்றிய உரையை அவர் நினைவு கூர்ந்தார். நமது விடுதலைப் போராட்ட வீரர்கள், காட்டிய தீரத்தையும், செய்த தியாகங்களையும் இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தி மொழியில் பல இலக்கியங்களை ஆன்லைன் மூலம் அளித்துள்ள வார்தா பல்கலைக்கழகத்தின் சாதனைகளை பாராட்டிய திரு நாயுடு, இதர இந்திய மொழி இலக்கியங்களும்,  இந்தி மொழிப் பெயர்ப்புடன் ஆன்லைனில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்திய மொழிகளில் உரையாடல்களை அதிகரிப்பது அவசியம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

வெளிநாட்டு மொழிகளான பிரெஞ்ச், ஸ்பானிஷ்,  சீன, ஜப்பானிய மொழிகளை இந்தி பயிற்று மொழியில் கற்பிக்கும் மகாத்மா காந்தி சர்வதேச பல்கலைக்கழகம், இதர இந்திய மொழிகளையும் அவ்வாறு கற்பிக்க வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் கேட்டுக் கொண்டார்.

***************


(Release ID: 1787421) Visitor Counter : 303