மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
2021-ம் ஆண்டில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சகத்தின் முக்கிய முன்முயற்சிகள் மற்றும் சாதனைகள்
Posted On:
30 DEC 2021 12:16PM by PIB Chennai
2021-ம் ஆண்டில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சகத்தின் பல்வேறு முன்முயற்சிகள், சாதனைகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்த சில முக்கிய அம்சங்கள் வருமாறு:
தேசியப் பொருளாதாரத்திற்கு கால்நடைத் துறை பங்களிப்பதோடு, 80 மில்லியன் கிராமப்புற குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் உலக அளவில் முன்னணியில் உள்ள இந்தியா, நடப்பு ஆண்டில் 198.48 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்துள்ளது, இதன் மதிப்பு ரூ. 8.32 லட்சம் கோடிக்கும் அதிகமாகும். இருப்பினும், உலகின் பெரும்பாலான பால்வள நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய பண்ணை விலங்குகளின் உற்பத்தித்திறன் குறைவாக உள்ளது. குறைந்த உற்பத்தித்திறன் காரணமாக, கறவை மாடுகளை வளர்ப்பதன் மூலம் விவசாயிகளுக்கு லாபகரமான வருமானம் கிடைப்பதில்லை.
உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும், அதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக லாபம் உருவாக்கவும், பசுக்களின் எண்ணிக்கையை மரபணு ரீதியாக மேம்படுத்துதல் மற்றும் உள்நாட்டு மாடுகளின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் ரூபாய் 2400 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு சமீபத்திய தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு அவர்களின் இடங்களிலேயே கிடைக்கின்றன.
கால்நடை மற்றும் பால்வளத் துறையில் மிக உயர்ந்த தேசிய விருதுகளில் ஒன்றான கோபால் ரத்னா விருது 2021-ல் தொடங்கப்பட்டது. இந்தத் துறையில் பணிபுரியும் விவசாயிகள், செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பால் கூட்டுறவு சங்கங்களை ஊக்குவிப்பதே இந்த விருதின் நோக்கமாகும்.
இனப் பெருக்க பண்ணை தளம் 26 நவம்பர் 2021 அன்று தொடங்கப்பட்டது. டிசம்பர் 23, 2021 அன்று மாண்புமிகு பிரதமரால் டெய்ரி மார்க் தொடங்கப்பட்டது. தேசிய செயற்கை கருவூட்டல் திட்டம், மரபணு தேர்வு திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
விவசாயிகளின் நேரடி பயன்பாட்டிற்கான விரிவான இன மேம்பாட்டு சந்தை மற்றும் தகவல் போர்டல் இ-கோபால் செயலி வடிவில் 10 செப்டம்பர் 2020 அன்று மாண்புமிகு பிரதமரால் தொடங்கப்பட்டது.
ராஷ்ட்ரிய கோகுல் மிஷனின் கீழ் 90958 பல்நோக்கு செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர்களை கிராமப்புற இந்தியாவில் (மைத்ரிகள்) பணியமர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செயற்கை கருவூட்டல் சேவைகள் விவசாயிகளின் வீட்டு வாசலில் கிடைக்கும்.
தரமான பால் உற்பத்தி, பால் கொள்முதல், பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான உள்கட்டமைப்பை உருவாக்குதல்/பலப்படுத்துதலை நோக்கமாகக் கொண்ட, மத்தியத் துறை திட்டமான “பால்வள மேம்பாட்டுக்கான தேசியத் திட்டம்” பிப்ரவரி-2014 முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேற்கண்ட திட்டம் ஜூலை 2021-ல் மறுசீரமைக்கப்பட்டது. மறுசீரமைக்கப்பட்ட திட்டம் 2021-22 முதல் 2025-26 வரை ரூ 1790 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
பால்வள மேம்பாட்டுக்கான தேசியத் திட்டத்தின் கீழ் ஜனவரி 2021 முதல் டிசம்பர் 2021 வரை மொத்தம் ரூ. 361.67 கோடி (மத்திய பங்கு ரூ.236.94 கோடி) மதிப்பீட்டில் 8 மாநிலங்களில் 12 புதிய திட்டங்கள் செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786265
****
(Release ID: 1786321)
Visitor Counter : 291