உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) உயிரி – எரிசக்தி ஆராய்ச்சி ஆய்வுக் கூடத்தை (DIBER) பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் திரு அஜய் பட் பார்வையிட்டார். மின்தொகுப்பால் அடிக்கடி மின் விநியோகம் பாதிப்பு ஏற்படக் கூடிய தொலைதூரப் பகுதிகளில் மின்சாரம் உற்பத்தி செய்யும் நோக்கில், பைன் மரக்காடு கழிவுகளிலிருந்து எரிசக்தி உற்பத்தி செய்ய திபேர் ஆய்வகம் முயற்சி மேற்கொண்டுள்ளது. பைன் மரக்காடு கழிவுகள் ஆயிரக்கணக்கான காட்டுத்தீ சம்பவங்களுக்கு காரணமாவதால், அந்தக் கழிவுகளை மின்சார உற்பத்திக்கு பயன்படுத்துவது இரட்டை வெற்றியை அளிப்பதாக இருக்கும்.
திபேர் நிறுவனம் உற்பத்தி செய்த பயோ டீசல் ஐ எஸ்-15607 தரத்திற்கு இணையானதாக உள்ளது. இது பல்வேறு கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, தகுதியானது என உறுதி செய்யப்பட்டபின் ராணுவ வாகனங்கள் மற்றும் ஜெனரேட்டர்களில், பெட்ரோல், டீசலுடன் 20% கலந்து பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டது. இது தவிர உத்தராகண்டின் தொலைதூர எல்லை கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள், உள்ளூர் மற்றும் மலைக்காய்கறிகளை சாகுபடி செய்வதற்கான நவீன தொழில்நுட்பங்களை வழங்குவதையும், திபேர் ஒரு தீவிர இயக்கமாக மேற்கொண்டு வருகிறது. 4,000–க்கும் மேற்பட்ட விவசாயிகள் திபேரில் பதிவு செய்து பயனடைந்து வருகின்றனர். இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகரித்திருப்பதோடு அவர்களது சமூக பொருளாதார அந்தஸ்தும் மேம்பட்டிருப்பதன் மூலம், எல்லைப்பகுதிகளில் இருந்து இடம் பெயர்வதை தடுப்பதற்கான நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.
ஹைட்ரோபானிக்ஸ் எனப்படும் மண்ணில்லா சாகுபடி முறையை வெகுவாகப் பாராட்டிய திரு அஜய் பட், சாகுபடிக்கு போதிய மண் இல்லாத பகுதிகளில் இந்த தொழில்நுட்பத்தை பரவலாக்குமாறு ஆலோசனை கூறினார். மேலும் திபேர் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் மூலிகை மருந்து, வெண்புள்ளி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுவதுடன் சுமார் ஒரு லட்சம் பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மருந்தை அதிகம் பேர் பயன்படுத்தும் வகையில், கொண்டு சேர்க்குமாறும் அமைச்சர் திரு அஜய் பட் கேட்டுக் கொண்டார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784808
-----